செய்திகள்
கோப்புப்படம்

சென்னை புறநகர் ரெயில் நிலைய கட்டிடத்தில் 80 அடி உயர மகாத்மா காந்தி ஓவியம் திறப்பு

Published On 2020-10-02 19:31 GMT   |   Update On 2020-10-02 19:31 GMT
தூய்மை வார கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்வாக, புறநகர் ரெயில் நிலைய கட்டிட சுவரில் 80 அடி உயரத்தில் வரையப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் அழகிய ஓவியம் நேற்று திறக்கப்பட்டது.
சென்னை:

சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் செப்டம்பர் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை வாரம் கொண்டாடப்பட்டது. இந்த தூய்மை வார கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்வாக, புறநகர் ரெயில் முனையமாக செயல்படும் மூர்மார்க்கெட் வளாக கட்டிட சுவரில் 80 அடி உயரத்தில் வரையப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் அழகிய ஓவியம் நேற்று திறக்கப்பட்டது.

இந்த புதிய முயற்சி காந்தியடிகளின் தூய்மை, சுகாதாரம் போன்ற அவருடைய சித்தாந்தங்களை பறைசாற்றுவதோடு அதற்கு உருவம் கொடுத்தது போல அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று இந்த ஓவியம் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தை முதன் முதலில் உருவாக்கியவர், தெற்கு ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவியர் வி.கி. சங்கரலிங்கம் ஆவர். தற்போது இந்த ஓவியமானது நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் வரையப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News