செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் மயக்கம்

Published On 2019-05-16 08:19 GMT   |   Update On 2019-05-16 08:19 GMT
ஊத்துக்கோட்டை அருகே மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் படுகாயமடைந்து மயக்கம் அடைந்தனர்.
ஊத்துக்கோட்டை:

திருவள்ளூரை சேர்ந்தவர்கள் வேலாயுதம், சண்முகம். இவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 40 பேருடன் பூண்டியை அடுத்த கூடியம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும் சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்ற குகைக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது குகை அருகே இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் எறிந்ததால் தேனீக்கள் கலைந்தன. அவை படை எடுத்து சரமாரியாக சுற்றுலா வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.

இதில் வேலாயுதம், சண்முகம், திருவள்ளூரை சேர்ந்த வக்கீல் எழில் அரசன், தீபக், செழியன், கல்யாணி, இவரது மகள் பவதாரணி, சிறுவானூரை சேர்ந்த ஹரிணி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டம் பிடித்ததால் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்து ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் கூடியம் குகைக்கு விரைந்து சென்றனர். தேனீக்கள் கொட்டி வலியால் துடித்து கொண்டிருந்த வேலாயுதம் உட்பட 10 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பென்னாலூர்பேட்டை போலீசார் சுற்றுலா அழைத்து சென்ற வேலாயுதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News