செய்திகள்
முத்தரசன்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: முத்தரசன் பேட்டி

Published On 2020-11-22 07:19 GMT   |   Update On 2020-11-22 07:19 GMT
கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று நடை பெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மாநில பொதுச் செய லாளர் முத்தரசன் தலைவர்கள் படத்தை திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு அரசியல் பேசி உள்ளார். அதில் பங்கேற்ற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அரசியல் பேசி உள்ளார்.

இது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை விழாவாக நடந்துள்ளது. இது வரலாற்று பிழை, ஜனநாயக விரோதம். நாங்களும் கலைவாணர் அரங்கில் விழா நடத்த அனுமதி கேட்போம். தராவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

ஆளும் கட்சியினர் அரசு விழாக்களில் அரசியல் பேசுகின்றனர். எதிர்கட்சியினர் கூட்டம் நடத்த விடாமல் கைது செய்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை பா.ஜ.க. கட்டுப்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கிறது. பீகார் தேர்தலில் பல முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் முறைகேடு செய்ய முயற்சிக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News