செய்திகள்
கே.கே.சைலஜா

புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்ற கட்சியின் முடிவை வரவேற்கிறேன் - கே.கே.சைலஜா

Published On 2021-05-18 19:30 GMT   |   Update On 2021-05-18 19:30 GMT
அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என்று கேரள முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான  கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை இந்த  கூட்டணி கைப்பற்றியது. இதனால் பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியானது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பினராயி விஜயன் பதவி ஏற்காமல் இருந்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் நடந்த  கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் வரும் 20-ம் தேதி 21 மந்திரிகளுடன் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

பினராயி விஜயனின் இரண்டாவது ஆட்சி காலகட்டத்தில்  அனைத்து மந்திரிகளும் புதுமுகமாக இருப்பார்கள் எனவும், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த கே.கே. சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.

ஏனென்றால் கடந்த எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்கவராக இருந்தவர் கே.கே.சைலஜா டீச்சர். ஓகி புயல், மழை வெள்ள பிரளயம், நிப்பா வைரஸ், கொரோனா பெருந்தொற்று ஆகிய காலங்களில் சிறப்பாக செயல்பட்டதாக சர்வதேச அளவில் கவனம் பெற்றவர் அவர்.



எனவே அவர் மீண்டும் சுகாதாரத் துறை மந்திரி ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் மந்திரியாக  ஆக வாய்ப்பு இல்லை என்ற தகவல் நேற்று வெளியாகியுள்ளது. முதல் மந்திரி பினராயி விஜயனைத் தவிர அனைவரும் புதிய நபர்களை நியமிக்க வேண்டும் என்று கட்சி தீர்மானித்ததைத் தொடர்ந்து கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் மந்திரியாகும் ஆக வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்கிற கட்சியின் முடிவை வரவேற்கிறேன் என்று கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கட்சித் தலைமை கடந்த முறை என்னை மந்திரியாக நியமித்தது. என் கடமையை சரியாக செய்தேன். அது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. என்னைப் போலவே கட்சியில் அனைவரும் நன்றாக உழைத்தனர்.

அதற்காக நானே தொடர வேண்டும் என்பதில்லை. சிறப்பாக பணியாற்றக் கூடிய பலர் இருக்கிறார்கள். அவர்களும் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது. புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்கிற கட்சியின் முடிவை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News