ஆன்மிகம்
ஞானத்தை வழங்கும் சரஸ்வதி வழிபாடு

ஞானத்தை வழங்கும் சரஸ்வதி வழிபாடு

Published On 2021-02-03 08:40 GMT   |   Update On 2021-02-03 08:40 GMT
கல்வி கேள்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணங்கிடும் நன்னாளே ‘சரஸ்வதி பூஜை’.
நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் சிறப்புடன் நடைபெறும். இதில் முதல் மூன்று நாள் வீரத்தின் அடையாளமாய் துர்க்கையையும், அடுத்த மூன்று நாள் செல்வத்தின் அடையாள மாய் லட்சுமியையும், கடைசி மூன்று நாள் கல்வியின் வடிவமாய் திகழும் சரஸ்வதியையும் வணங்கி வழிபடுகிறோம். கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு பண்டிகை முடிவதால், அந்த பண்டிகை நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்றே அனைத்து மக்களும் கொண்டாடுகின்றனர். கல்வி கேள்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணங்கிடும் நன்னாளே ‘சரஸ்வதி பூஜை’.

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடி இறைவனை வணங்க பூஜை செய்கிறோம். ஆனால் அந்த பண்டிகையின் பெயருடன் பூஜை என்ற சொல் சேர்ந்து வருவதில்லை. ஞான கடவுளான சரஸ்வதியை வணங்கும் பூஜைக்கு மட்டுமே ‘சரஸ்வதி பூஜை’ என்று பெயர். நாம் செய்யும் பூஜை என்பது, நமக்குள் ஓர் ஞான பூர்த்தியை ஏற்படுத்த வேண்டும். மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயையை அகற்றி ஞானத்தை உண்டாக்க செய்வதே பூஜை. அத்தகைய ஞானத்தை தருபவளான சரஸ்வதிக்கு மட்டுமே ‘பூஜை’ என்ற சொல் சேர்ந்து வரும்.

சிறப்பு மிக்க சரஸ்வதி பூஜை அன்று, வீடு மற்றும் அலுவலகங்களில் சரஸ்வதி தேவியை வணங்கி பூஜைகள் செய்வர். பெரும்பாலும் அலுவலகங்களில் யாகம் செய்து பெரும் பூஜையாக மேற்கொள்கின்றனர். வீட்டிலும் அதுபோல் முறைப்படியான பூஜைகள் மேற்கொள்ளலாம். அது முடியாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாட்டிற்குரிய இடத்தில் சரஸ்வதி படம் அல்லது அன்னையின் முக உருவம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம். சரஸ்வதிக்கு அருகம்புல் மற்றும் மலர்மாலை சார்த்தி, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். நவராத்திரி முழுவதும் விரதமிருந்து அன்னையை வணங்காதவர்கள் கூட, சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை வணங்கினால் போதுமானது. கலசம் வைத்து கலைவாணியை எழச்செய்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.

சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்த பின், ஐந்துமுக குத்து விளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தலைவாழை இலையில் பழங்கள், அவல், பொரி, கடலை போன்றவை வைத்து ‘ஓம் கணேஷாய நமஹ’ என்றும், ‘ஓம் துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம’ என்றும் கூறி பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி ஸ்தோத்திரம் மற்றும் ஆராதனை பாடல்களை பெரியவர்களும், குழந்தைகளும் ஒரு சேர சொல்லி, பின் அன்னைக்கு பிடித்த நைவேத்தியமான பால்பாயசம், வெள்ளைகடலை சுண்டல், பொங்கல் படைத்து கற்பூர தீபாரதனை செய்திட வேண்டும்.

சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், எழுதுகோல், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும். அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானமாக வழங்கலாம். சரஸ்வதி பூஜை முடிந்த பின் மறுநாள் காலை மறுபடியும் சரஸ்வதி தேவியின் முன், புதிய இலையில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி, கடலை வைத்து பூஜை செய்த பின் தான் படத்தை எடுக்க வேண்டும். முகம் மற்றும் கலசம் வைத்திருந்தால் எடுத்து நீர்நிலைகளில் கரைத்து விடலாம்.

சரஸ்வதி தேவி வெண்மை நிறத்துடன் இருப்பவர். அதனால் வெண்தாமரை, மல்லி, முல்லை, இருவாட்சி, சம்பங்கி போன்ற பூக்கள் அவளுக்கு ஏற்ற பூக்களாய் உள்ளன. அலங்கரித்த சரஸ்வதி உருவமாய் இருப்பின் முத்துமாலை அணிவித்து பூஜை செய்யலாம். சரஸ்வதி தேவி ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், அவளை வணங்கி ஞானத் தெளிவை பெறுவோம்.
Tags:    

Similar News