செய்திகள்
களக்காடு பகுதியில் ஜி.கே. வாசன் பிரசாரம் செய்த காட்சி.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது- ஜி.கே.வாசன் பிரசாரம்

Published On 2019-10-16 11:20 GMT   |   Update On 2019-10-16 11:20 GMT
முதல்வரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது என்று நாங்குநேரி தொகுதி பிரசாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேசியுள்ளார்.

களக்காடு:

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் களக்காடு பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த இடைத்தேர்தல் தேவையற்ற இடைத்தேர்தல். தொகுதி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற ரீதியில் தொகுதி மக்களை நடுவில் விட்டு விட்டு அடுத்த பதவிக்கு சென்றுவிட்டதால் தேர்தல் வந்துள்ளது. மக்களை மதிக்காத காங்கிரசிற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. எப்போது பதவிக்கு வரலாம் என்று துடித்துக்கொண்டிருந்த காலம் போய் இன்று இந்த ஆட்சியை அகற்ற முடியாது, இந்த ஆட்சி மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு உங்கள் வளர்ச்சிக்கு, தொகுதி வளர்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் வாக்காகும். சட்டமன்ற தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

125 ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது. வெறும் 52 எம்.பி.க்களை வைத்து மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் எங்கே என்று கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் மீண்டும் ஏமாற்ற நினைத்தால் அதற்கு நாங்குநேரி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இந்த ஆட்சியில் நகரம் முதல் குக்கிராமம் வரை அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கின்றன. முதல்வரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க. கண்மூடித்தனமாக எதிர்க்கின்றது. மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்பட பலர் சென்றனர். 

Tags:    

Similar News