செய்திகள்
பலியான குட்டி ஆண் யானை.

உடல் நலக்குறைவுடன் சுற்றி திரிந்த குட்டி ஆண் யானை இறந்தது

Published On 2021-11-09 03:55 GMT   |   Update On 2021-11-09 03:59 GMT
கோவை அருகே உடல் நலக்குறைவுடன் சுற்றி திரிந்த குட்டி ஆண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.
கவுண்டம்பாளையம்:

பெரியநாயக்கன்பாளையம் வனசரகம் தடாகம் காப்புக்காடு சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரி அருகே உள்ள சிறிய பள்ளத்தில் கடந்த 6-ந்தேதி 7 வயதான குட்டி ஆண் யானை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

உடனடியாக வனசரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், கோவனூர் கால்நடை உதவி டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

இதை தொடர்ந்து யானை தானாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

நேற்று காலை பூச்சியூர் கிரீன் கார்டன் அருகே உள்ள வனப்பகுதிக்குள் அந்த குட்டியானை வந்தது. நடந்து வந்து கொண்டிருந்த யானை திடீரென மயங்கி கீழே விழுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் கால்நடை டாக்டர்களுடன் விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டு, யானைக்கு செலுத்தப்பட்டது. மேலும் வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகளும் யானைக்கு உணவாக கொடுத்தனர். ஆனால் யானையால் எழுந்திருக்கவே முடியவில்லை. இருப்பினும் யானையை கண்காணித்து கொண்டே இருந்தனர்.

நேற்று காலை தொடங்கிய சிகிச்சை இன்று காலை வரை விடிய, விடிய நடந்தது. ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி 7 வயது ஆண் குட்டி யானை இறந்து விட்டது. யானை இறந்தது குறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உயர் அதிகாரிகளும், வனத்துறையினர் உடனடியாக யானை இறந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை டாக்டர்கள் யானையை உடற்கூராய்வு செய்யும் பணியை தொடங்கினர். உடற்கூராய்வு செய்த பின்னரே யானை எப்படி இறந்தது, இறந்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும்.
Tags:    

Similar News