செய்திகள்
151 மசாஜ் கிளப்புகளில் போலீசார் அதிரடி சோதனை

விபசாரம் நடப்பதாக புகார்: 151 மசாஜ் கிளப்புகளில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2021-11-22 04:12 GMT   |   Update On 2021-11-22 04:12 GMT
சென்னையில் 151 ‘மசாஜ் கிளப்’புகளில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சென்னை:

சென்னையில் ஏராளமான மசாஜ் கிளப்புகள் செயல்படுகின்றன. ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் இந்த மசாஜ் கிளப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் இதற்கு அனுமதி பெற வேண்டும். மாநகராட்சியும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் மசாஜ் கிளப்புகளுக்கு அனுமதி வழங்குகிறது.

மசாஜ் கிளப்புகளில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை மீறி ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன.

அந்தவகையில் சென்னையில் 151 மசாஜ் கிளப்புகள் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார் 151 மசாஜ் கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சட்ட விரோதமாக மசாஜ் கிளப் நடத்திய உரிமையாளர்களும், புரோக்கர்களும் பிடிபட்டனர். பல மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத சிகிச்சை என்று கூறிக்கொண்டு வெளிப்படையாக விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

விபசாரத்துக்கு ஆண்களை அழைப்பதில் ஒரு ரகசிய வார்த்தை வைத்து இருந்தனர். மசாஜ் கிளப்புகளுக்கு ஆண்கள் செல்லும்போது பவுடர் மசாஜ் வேண்டுமா? ஆயில் மசாஜ் வேண்டுமா? என்று கேட்பார்கள். பவுடர் மசாஜ் என்றால், அது சாதாரணமாக இருக்கும். அதில் 'செக்ஸ்' கலந்து இருக்காது. ஆயில் மசாஜ் என்றால், அழகிகளோடு உல்லாசமாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

போலீஸ் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் நேற்று மாலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இரவு வரையிலும் சோதனை நீடித்ததால், பிடிபட்ட அழகிகள் எத்தனை பேர்?, புரோக்கர்கள் எத்தனை பேர் பிடிபட்டார்கள்? என்ற விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.
Tags:    

Similar News