பெண்கள் மருத்துவம்
தாம்பத்திய திருப்தியின்மை

தாம்பத்திய திருப்தியின்மை : புதிய ‘சர்வே’ வெளிப்படுத்தும் உண்மை

Published On 2022-02-14 07:50 GMT   |   Update On 2022-02-14 07:50 GMT
தனியார் நிறுவனம் ஒன்று தம்பதிகளிடம், ‘நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு விடைதேடியுள்ளது.

கணவனும், மனைவியும் ஜாடியும் மூடியும் போன்று இணைந்து வாழவேண்டும் என்று சொல்வார்கள். அவை இரண்டும் அவ்வப்போது தட்டிக்கொள்வதும், முட்டிக்கொள்வதும் இயல்புதான். ஆனால் அதிக வேகத்தில் முட்டினால் ஜாடியும், மூடியும் சேர்ந்தே உடைந்துபோகும். அந்த நெருக்கடிதான் இப்போது சில குடும்பங்களில் ஏற்பட்டிருக்கிறது.

அத்தகைய நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய, தம்பதிகளிடம் பல்வேறு விதமான கருத்துக்கணிப்புகளை நடத்திவருகிறார்கள்.

தனியார் நிறுவனம் ஒன்று தம்பதிகளிடம், ‘நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு விடைதேடியுள்ளது.

பதில் அளித்தவர்களில் 22 சதவீதம் பேர் ‘திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக’ பதில் கூறியுள்ளனர். திருமணத்தை பற்றி அவர்கள் கண்ட கனவுகள் ஈடேறவில்லை என்றும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரிடமுமே இந்த எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்களில் ஒரு பகுதியினர் ‘திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம்’ என்ற சிந்தனையும் அவ்வப்போது வருவதாக கூறியிருக்கிறார்கள்.

கருத்து தெரிவித்திருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ‘திருமணத்திற்கு முன்பு தாங்கள் சுதந்திரமாக இருந்ததாகவும், மணவாழ்க்கையில் இணைந்த பின்பு சுதந்திரத்தை இழந்ததாகவும்’ குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி புலம்புபவர்களில் பெண்கள்தான் அதிகம்.

அவர்கள், ‘திருமணத்திற்கு முன்பு வரை நிறைய பயணம் மேற்கொண்டோம். பெற்றோருக்கும் முடிந்த உதவிகளை செய்தோம். இப்போது கணவரும், அவரது குடும்பத்தினருமே எங்கள் உலகமாக மாறிவிட்டனர். எங்களுக்காக எங்களால் வாழ முடிவதில்லை. எங்கள் நேரத்தை எங்களுக்காக செலவிடவும் முடியவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார்கள்.

கணவரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்று அவர்களிடம் கேட்டபோது, ‘சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில்லை. எதிலும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். மது அருந்துகிறார்கள். பொறுப்பாக நடந்துகொள்வதில்லை. பொய் சொல்கிறார்கள்..’ என்றெல்லாம் அடுக்குகிறார்கள்.

‘திருமணமான புதிதில் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பார். பேசும் நேரத்தை இப்போது படிப்படியாக குறைத்துவிட்டார்’ என்று 40 சதவீத பெண்கள் குறைபட்டிருக்கிறார்கள். ‘கணவரிடம் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினாலும் அதனால் குறிப்பிட்ட அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்’ என்ற அவநம்பிக்கை 15 சதவீத பெண்களிடம் இருந்துகொண்டிருக்கிறது.

எத்தனை வருடங்கள் உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது? என்ற கேள்விக்கு, பெரும்பாலான பெண்கள் ‘ஒரு வருடம்’ என்று பதிலளித்திருக்கிறார்கள். வாழ்க்கை எப்போது சிக்கலான காலகட்டத்தை அடைந்ததுபோல் கருதினீர்கள்? என்ற கேள்விக்கு, ‘ஐந்து வருடத்தை’ பதிலாக அளித்திருக்கிறார்கள். அதாவது முதல் வருடம் இனிப்பாக இருந்த வாழ்க்கை பின்பு கசக்க ஆரம்பித்திருக்கிறது.

இருபது சதவீதத்தினர், வாழ்க்கையில் ஒரு முறையாவது விவாகரத்து பெற்று மணவாழ்க்கையில் இருந்து விடுதலைப் பெற்றுவிடலாமா என்று சிந்தித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ‘வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மணவாழ்க்கை எப்படியோ நீண்டு சென்றுகொண்டிருக்கிறது’ என்று 80 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

ஆண்களில் 23 சதவீதத்தினர் திருமணத்திற்கு பின்பு தங்களது சுதந்திரமும் பறிபோனதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 68 சதவீதத்தினர் மனைவிக்காக தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டிருப்பதாகவும் சர்வேயில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் 87 சதவீதம் பெண்கள் ‘திருமணத்திற்கு பின்பு எங்கள் பழைய நட்புகளை எல்லாம் இழந்துவிட்டோம். அதற்கு காரணம் கணவர்தான். நட்புகளை இழந்ததால் கணவர் மீது அவ்வப்போது கோபம் வரும்’ என்ற யதார்த்த உண்மை யையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த சர்வே பற்றி மனோதத்துவ நிபுணர் சொல்லும் கருத்து:

“இந்த சர்வேயில் கணவரிடம் பிடிக்காத விஷயங்கள் பற்றி மனைவிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவை பலப்படுத்த விரும்பும் ஆண்கள் தங்களிடம் இத்தகைய குறைகள் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மணவாழ்க்கையில் இணையும் ஆண்-பெண் இருவருமே இருவேறு குடும்பம், சூழல், கலாசாரம் போன்றவைகளின் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்கள் இருவரும் அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போவது அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சரியான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற முன்வரவேண்டும்” என்கிறார்.
Tags:    

Similar News