செய்திகள்
கோப்பு படம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-03-06 09:49 GMT   |   Update On 2021-03-06 10:56 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூரில் கடந்த 2நாட்களுக்கு முன்பு 15 பேருக்கும், நேற்று முன்தினம் 20 பேருக்கும், நேற்று 25 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,439ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 18,085 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 224 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் திருப்பூரில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தற்போது மீண்டும் பணிக்காக திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா உள்ளிட்ட எந்தவித பரிசோதனையும் செய்யப்படாமல் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

படிப்படியாக இவை அனைத்து தரப்பு மக்களுக்கும் போடப்படும்.இருப்பினும் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின் பற்றுதல், கட்டாயம் முக கவசம் அணிதல், கூட்ட நெரிசல்கள் , திருவிழாக்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் .

குழந்தைகள் , முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதால் கட்சி தொண்டர்கள் கையுறை, முககவசம் உள்ளிட்டவற்றை அணிந்து செல்ல வேண்டும். கூட்டமாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது.அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றனர்.

Tags:    

Similar News