செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை, தென்காசியில் ‘சர்கார்’ பட பாணியில் டெண்டர் ஓட்டு போட்ட 3 வாக்காளர்கள்

Published On 2021-04-07 09:21 GMT   |   Update On 2021-04-07 09:21 GMT
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று ஓட்டுபதிவின் போது 3 வாக்காளர்கள் டெண்டர் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
நெல்லை:

தேர்தலில் ஒரு வாக்காளரின் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டு அந்த வாக்காளர் தனது வாக்களிக்க உரிமை கோரி கள்ள ஓட்டு நிரூபணமானால் அவருக்கு தேர்தல் ஆணையத்தின் ‘49 பி’ என்ற விதிப்படி வாக்குச்சாவடி அலுவலர் டெண்டர் ஓட்டு போட அனுமதி வழங்குவார்.

இவ்வாறு சம்பந்தப்பட்ட வாக்காளர் செலுத்தும் வாக்குகள் தனியாக வைக்கப்பட்டு மற்ற வாக்குப்பதிவு எந்திரங்களுடன் அனுப்பி வைக்கப்படும். அந்த தொகுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் டெண்டர் ஓட்டு முக்கிய பங்கு வகித்தால் மட்டுமே அந்த ஓட்டுகள் எண்ணப்படும்.

இந்த டெண்டர் ஓட்டு குறித்து விஜய் நடித்த ‘சர்கார்’ திரைபடத்தின் மூலம் விழிப்புணர்வு அதிகரித்தது. அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று ஓட்டுபதிவின் போது 3 வாக்காளர்கள் டெண்டர் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த விஜய் (வயது 23) என்பவர் நேற்று வாக்களிக்க சென்றார். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப் பட்ட பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க சென்றார். அதனை அதிகாரி கள், பூத் ஏஜெண்டுகள் சரிபார்த்த போது ஏற்கனவே அவரது வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என தெரியவந்தது.

இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்து தேர்தல் அலுவலர் களிடம் புகார் செய்தார். விசாரணையில் இவர் தான் விஜய் என்பதும், இவரது ஓட்டை மற்றொருவர் போட்டு சென்றதும் தெரிய வந்தது. இதனை உறுதி செய்த அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் உத்தரவுபடி விஜய்க்கு டெண்டர் ஓட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.

பின்னர் அவர் தனது வாக்குச்சீட்டின் மூலம் பதிவு செய்தார். அதனை பெற்ற அதிகாரிகள் கவரில் சீல் வைத்து ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் தனியாக அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மருதநாச்சிவிளையை சேர்ந்தவர் பரமேஸ்வரி (38), பணகுடியை அருகே உள்ள நெல்லையைப்பபுரத்தைச் சேர்ந்த பாப்பா (55) ஆகியோரும் சம்பந்தப்பட்ட தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்ற போது அவர்களது வாக்கும் ஏற்கனவே பதிவு செய்யபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களும் டெண்டர் ஓட்டு மூலம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
Tags:    

Similar News