செய்திகள்
பி.கே.சி. மெகா தடுப்பூசி மையம் மூடப்பட்டதையும், பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதையும் காணலாம்.

தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் தாமதம் மகாராஷ்டிராவில் கொரோனா 3-வது அலைக்கு வழிவகுக்கும்

Published On 2021-04-29 03:23 GMT   |   Update On 2021-04-29 03:23 GMT
தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் தாமதம் மகாராஷ்டிராவில் கொரோனா 3-வது அலைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் நடந்துவரும் வேளையில், மே 1-ந் தேதி முதல் 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மராட்டிய அரசு தொடங்க திட்டமிட்டு இருந்தது.

இந்தநிலையில் தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மே 1-ந் தேதி தொடங்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று தெரிவித்தார்.

இந்தநிலையில் தடுப்பூசி போடும் பணியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை கொரோனா 3-வது அலைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட தகுதியுள்ள 9 கோடி மக்களில் இதுவரை 1.50 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளோம். இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

டிசம்பரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்ட தளர்வு காரணமாக பிப்ரவரியில் 2-வது அலை ஏற்பட்டது. இதன்பிடியில் சிக்கி தான் நாம் தற்போது அவதிக்குள்ளாகி வருகிறோம்.

தடுப்பூசி போடவில்லை என்றால் 3-வது அலைக்கு சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பணிகுழுவை ஒருவர் கூறுகையில், “விரைவில் மழைக்காலம் தொடங்க வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் மழை மற்றும் நிலச்சரிவு என கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு பல தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “கோடையில் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி போடுவதற்கு இருந்த பொன்னான வாய்ப்பை நாம் வீணடிக்கிறோம்” என்றார்.

விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “கொரோனா வைரசின் மரபணு வரிசையில் ஏற்படும் மாற்றம் தொடர்ந்தால் அது தடுப்பூசியின் நோக்கத்தை தோல்வியில் முடிக்கக்கூடும். தடுப்பூசி போடும் பணிக்கு நாம் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் புதிய பிறழ்வுகள் மூலமாக கொரோனா வைரசில் மாறுபாடுகளை காணலாம். இதனால் நோய் பாதிப்பு மோசமாக வாய்ப்புள்ளது” என்றார்.
Tags:    

Similar News