ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

11 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் திருப்பதி

Published On 2020-01-06 06:54 GMT   |   Update On 2020-01-06 06:54 GMT
12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற 11 ஆழ்வார்களாலும் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஒரு திருப்பதி ஸ்ரீரங்கம் திருப்பதி மட்டுமே ஆகும்.
பாரத நாட்டின் பழமையான சமயங்களான சைவம், வைணவம் இரண்டும் திருச்சி மாவட்டத்தில் மிகவும் கீர்த்தி பெற்றவை ஆகும். அந்த வகையில் வைணவத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியது பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் என்று சொன்னால் மிகையாகாது. வைணவ மரபில் கோவில் என்றாலே ஸ்ரீரங்கத்தை தான் குறிக்கும். சரித்திரம், சமயம், தத்துவம், கலைகள், இலக்கியம் என பலவித பெருமைகள் உடைய ஸ்ரீரங்கம் கோவிலில் சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், ஹோய்சாளர்கள் மட்டுமின்றி ஆங்கிலேய ஆட்சியாளர்களும் திருப்பணிகள் செய்து உள்ளனர்.

புனித நகரம்

இக்கோவிலில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் உற்சவங்கள் முதலிய அனைத்தும் தொன்று தொட்டு மரபு மீறாமல் நடைபெற்று வருவது சிறப்புக்குரியது. திருச்சி மாவட்டத்தில் வைணவத்தின் வரலாறு என்பது ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டதாகும். அரங்கம் என்பது ஆற்றிடைக்குறை என பொருள்படும். காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே முெ்காம்பில் தொடங்கி கல்லணை வரை ஸ்ரீரங்கம் ஒரு சிறிய தீவாக உள்ளது. இத்தீவில் 156 ஏக்கர் பரப்பளவில் 21 கோபுரங்களையும், 7 பிரகாரங்களயைும், 58 சன்னதிகளையும் கொண்ட ஒரு புனித நகரமாக 108 வைணவ திருப்பதிகளில் முதலிடம் வக்கின்ற திருப்பதியாக ஸ்ரீரங்கம் விளங்கி வருகிறது.

ஸ்ரீரங்கம் திருப்பதி

12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற 11 ஆழ்வார்களாலும் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஒரு திருப்பதி ஸ்ரீரங்கம் திருப்பதி மட்டுமே ஆகும். கம்பனின் ராமாயணயம் அரங்கேற்றம் செய்யப்பட்டதும் ஸ்ரீரங்கம் திருப்பதியில் தான். தாயார் சன்னதிக்கு நேர் எதில் உள்ள மண்டபத்தில் தான் ராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கம் மூலவர் ரெங்கநாதர் ெபரிய பெருமாள் என போற்றப்படுகிறார். உற்சவம் நம்பெருமாள். வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே திருத்தலமும் ஸ்ரீரங்கம் தான்.

வைகுண்ட ஏகாதசி

சித்திரை தேரோட்டமும், 21 நாட்கள் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில் சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசி விழாவில் நடைபெறும் திருவாய்மொழி திருநாள் ஒரு தமிழ் திருநாளாகும். மேலும் நம்பெருமாள் வீதிகளில் எழுந்தருளும் போது அவருக்கு முன்பாக மறை ஓதுவதும் வழக்கம். கோவிலின் சாற்றுமுறை போன்ற நேரங்களில் வடமொழிபோல் தமிழுக்கும் ஸ்ரீரங்கத்தில் ஏற்றம் தரப்படுகிறது.
Tags:    

Similar News