செய்திகள்
ராமதாஸ்

சிறுவர்கள் தவறான பாதையில் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-09-28 08:45 GMT   |   Update On 2021-09-28 08:45 GMT
குழந்தைகள் தவறான வழியில் திசை மாறிச்செல்லாமல் தடுப்பது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய வி‌ஷயம் அல்ல.

தமிழ்நாட்டில் சிறுவர்கள் ஈடுபட்ட கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் இரு மடங்குக்கும் கூடுதலாகி இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இளம் தளிர்கள் வளரும்போதே களைகளாக மாறுவது வேதனையளிக்கும் வி‌ஷயமாகும். இதற்கான காரணங்கள் என்னென்னவென்று கண்டுபிடித்து அவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை தரமான, சுகமான, சுமையற்ற, ஒழுக்க நெறிகள் மற்றும் விளையாட்டுடன் கூடிய கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும்.

அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் அன்பு காட்டி அரவணைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் தவறான வழியில் திசை மாறிச் செல்லாமல் தடுப்பது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

சென்னையில் காவல்துறையினரால் நடத்தப்படும் காவல் சிறார் மன்றங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்து வருகிறது. இத்தகைய பள்ளிகள் அதிகரிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் அவர்களுக்கு இயல்பாக உள்ள கல்வி மற்றும் கலை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News