ஆன்மிகம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று மயான பூஜை

Published On 2021-02-24 06:43 GMT   |   Update On 2021-02-24 06:43 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று நள்ளிரவு மயான பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு விடிய, விடிய 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜையும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டுதல், இரவு 6 ம ணிக்கு சித்திரைத்தேர் வடம்பிடித்தல், 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்குதல் 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும், 1-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News