செய்திகள்

குலசேகரம் அருகே இடி, மின்னலுடன் பலத்த மழை- மரம் விழுந்து வீடு சேதம்

Published On 2019-05-13 12:09 GMT   |   Update On 2019-05-13 12:09 GMT
குலசேகரம் அருகே நேற்று மாலை இடி, மின்னலுடன் பெய்த மழையில் மரம் விழுந்து வீடு சேதமானது.

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், மலையோர கிராமங்களிலும் கோடை மழை பெய்கிறது. நேற்று மாலையிலும் குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

மழை காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

குலசேகரம் பகுதியில் பெய்த மழையில் மரம் விழுந்து குடிசை வீடு ஒன்று சேதமானது. குலசேகரத்தை அடுத்த வெண்டலிக் கோட்டில் இச்சம்பவம் நடந்தது.

வீட்டில் கூலித்தொழிலாளி ராஜன் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். அவருடன் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் ராஜனின் தாயார் ஆகியோர் இருந்தனர்.

குலசேகரம் பகுதியில் நேற்று மாலை மழை பெய்த போது வீட்டில் ராஜனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். அப்போது வீட்டின் அருகே நின்ற மரம் பலத்த மழையால் சரிந்து விழுந்தது.

மரம் விழும் சத்தம் கேட்டதும், ராஜனும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராஜனின் வீடு மழையால் இடிந்த தகவல் வருவாய் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி ரவி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அந்த பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்தார். அதனை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

Tags:    

Similar News