ஆன்மிகம்
சாய்பாபா

சாய்பாபாவுக்கு ஆரத்தியும்-வழிப்பாட்டு முறையும்

Published On 2019-11-14 07:01 GMT   |   Update On 2019-11-14 07:01 GMT
சீரடி சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி செய்யும் முறையையும், வழிப்பாட்டு முறையையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சாய் மார்க்கத்தில் செல்வதற்கு மூன்று சிறந்த வழிகள் உண்டு. அதில் முதலாவது,

1. சீரடிக்கு செல்வது
2. சாயி சத்சரித்திரம் பாராயணம் செய்வது.
3. நான்கு வேளைகளும் ஆரத்தி பாடுவது.

இதில் மூன்றாவது வேலையை முதலில் செய்துவிட்டால் முதல் இரண்டு வேலைகளும், எந்த தடையுமின்றி நடக்கும். ஆகையால் ஆரத்தி செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும்.

குடும்பத்தினர், பந்துக்கள் ஓர் இடத்தில் சேர்ந்து ஒழுங்கு தவறாமல் சாய் ஆரத்திகளை பாடுவதினால் மனம் நிம்மதியடைந்து நல்ல சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும். ஆரத்தி நடக்கும் இடம் புனிதமடைந்து சாந்தி நிலையமாக மாறும். சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.

காலை 4.30 காகட ஆரத்தி


மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும். மாலையில் சூரியன் மறையும் கோதூளி வேளையில் தூப ஆரத்தியும், இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடைபெறுகின்றன. சமாதி மந்திரியில் ஆரத்தி நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், துவாரக மயீ, சாவடி, குருஸ்தான், க்யூ காம்ப்ளக்சில் டி.வி.யில் பார்த்துக் கொண்டு நாம் ஆரத்தி நடத்திக் கொள்ளலாம். இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன. ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறுசுறுப்படையலாம்.

இந்த ஆரத்தியால் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. நாம் காலையில் எழுந்து சத்குருவை நினைத்து உலகமும் நாமும் நலமாக இருப்பதற்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மத்திய வேளை ஆரத்தி உதவி செய்கிறது. மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப ஆரத்தி உதவி செய்கிறது.

இன்று நடந்த நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம். இந்த நான்கு ஆரத்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செல்லும்,. அதுவே பாபாவின் வழி. எங்கெல்லாம் சாய் ஆரத்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் உறுதி மொழி கூறுகிறார். சீரடி சாய் பாபாவுக்கு முதன் முதல் எழுதப்பட்ட ஆரத்திப் பாடல் ஆரத்தி சாய் பாபா. இந்த பாடல் மத்திய வேளையில் தூப ஆரத்தியில் உள்ளது.

இந்த பாடலுடன் தான் தூப ஆரத்தி ஆரம்பமாகும். இந்தப் பாடலை எழுதியவர் மாதாவா அக்கர். காலம் செப்டம்பர் 1904 (இந்தப் பாடலை தாசகணுவிற்கு காட்டினார். அவர் இந்த பாடலை நம் பாபா பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள். (இந்த பாடல் நன்றாக இருக்கிறது. இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.

பாபாவின் அவதாரம் இன்னும் நடந்து கொண்டே யிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் மற்றுமொரு ஜென்மம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை யென்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நான்கு வேளைகளிலும் சமாதி மந்திரியில் ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது.

சமாதியில் இருந்து கொண்டே நான் எல்லா காரியங் களை யும் செய்து கொண் டிருப்பேன். என்று பாபாவே 11 கட்டளைகளில் கூறியதை நாம் நினைவு கொள்ள வேண்டும். சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி, அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. தூப ஆரத்தி முதலில் சாதே வாடாவில் (இப்பொழுது குரு ஸ்தானம்), அதற்கு பிறகு தீட்சித் வாடாவில் (இப்பொழுது மியூசியம்) நடந்து கொண்டிருந்தது.

நான்கு ஆரத்திகளில் மொத்தம் 30 பாடல்கள் இருக்கின்றன. ஆரத்தி என்பது சுலபமாக பக்தியை வெளிகாட்ட அக்னியோடு சம்மந்தப்பட்ட ஒரு வழிபாடு. கூட்டு பக்தி வழிபாட்டில் நெய்யில் வத்தியை ஊறவிட்டு தீபங்காட்டி பக்தி கீதங்கள் பாடுவார்கள். ஆரத்தி கொடுத்ததை இரண்டு கைகளால் வாங்கி கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள். சாயிபாபா குரு தேவுக்கு ஆரத்தி கொடுத்து கொண்டிருக்கும் பொழுது கண்ணாறப் பார்ப்பது புண்ணியமும், யோகமும், ஷேமமும் கூட, ஆரத்தி நடக்கிற பொழுது பூசாரி அந்த தீபத்தை வலது கையில் காண்பித்து இடது கையில் மணியை ஆட்டிக் கொண்டு ஆரத்தி செய்வார்.

முதலில் தீபத்தை பாபாவின் காலடியில் 4 முறை ஆரத்தி காட்டுவார். அதன் பின் வயிறு தொப்புள் அருகே 2 முறை ஆரத்தி சுற்றுவார். முகத்தினருகே ஒரு முறை ஆரத்தி சுற்றுவார். தலையில் இருந்து கால்வரை உடம்பு முழுவதும் ஏழு முறை சுற்றுவார். அதன் பிறகு பாதத்தில் இருந்து தலை வரை 3 முறை ஆரத்தி சுற்றி ஆரத்தி பாடல்கள் பாடுவார்கள். பாபா உடலோடு இருக்கிற பொழுது இப்படித்தான் ஆரத்தி எடுக்கப்பட்டது.

முதலில் 4 முறை ஆரத்தி சுற்றுவதற்கு அர்த்தம், நமக்கு நான்கு விதமான புருஷார்த்த நன்மைகள் ஏற்படவே. இரண்டு முறை ஆரத்தி சுற்றுவதற்கு அர்த்தம் நம்முடைய ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் சேர்ப்பதற்கே. ஒரு முறை ஆரத்தி எதற்கென்றால் பரத்மாத்மாவுக்கும் நமக்கும் நடுவில் இருக்கிற கண்ணாடி சுவர் மறைந்து அவருக்கும் நமக்கும் எவ்வித பேதங்களும் இல்லை என்பதை தெரிவிப்பதற்கே.

கடைசியில் ஏழுமுறை ஆரத்தி சுற்றுவது எதற்கென்றால் நாம் ஏழு கடல் தள்ளி இருந்தாலும் கருணைக் கடல் பாபா நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என்பதை தெரிவிப்பதற்கே. மூன்று முறை ஆரத்தி எதற்கென்றால் நாம் எல்லோரும் திரிகுணத்திற்கு அப்பாற்பட்டவர் ஆக வேண்டும் என்பதற்கே. ஆகையினாலேயே முடிந்த வரை ஒரே குரலில் மிக பக்தியுடன் எல்லோரும் கலந்து கொண்டு ஆரத்தி செய்ய வேண்டும். புதிதாக ஆரத்தி பாடுபவர்கள் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாபா புகைப்படம் முன் அமர்ந்து ஆரத்தி பாடல் பாட வேண்டும் அதன் பொருளை படித்து புரிந்து கொண்டால் நல்ல பலன்கள் கிட்டும்.
Tags:    

Similar News