செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-09-17 05:29 GMT   |   Update On 2019-09-17 05:29 GMT
எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:

சோழிங்க நல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நேற்றிரவு நடைபெற்றது.

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வெளிநாடு சென்றுவந்ததை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசுகிறார். தி.மு.க. ஆட்சியின் போது கூவத்தை சுத்தப்படுத்த போவதாக மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றாரே? கூவம் சுத்தமாகிவிட்டதா?

அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்காக பாடுபடும் ஆட்சி. மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு பெருகிக்கொண்டே வருகிறது. இந்த ஆட்சியை குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான் மு.க.ஸ்டாலின் வேலை. அவரது பேச்சை மக்கள் பொருட்படுத்துவது கிடையாது.

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது எதற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று புரியவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். எத்தனையோ நாடகங்களை நடத்தி பார்த்தார். எதுவுமே கைகூடவில்லை. அவர் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக உள்ளது.

நான் திட்டவட்டமாக சொல்கிறேன். எந்த காலத்திலும் ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது. முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் ராசியில்லாதவர். தி.மு.க.வை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

ஜெயலலிதாவால் வளர்ந்தவர்கள் நாங்கள். அவரால் வளர்க்கப்பட்டோம். எங்களுக்குள் சண்டை மூட்டிவிட பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்காது. எனக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதுபோல் சித்தரிக்கிறார்கள்.

எந்த காலத்திலும் எனக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடே இருந்தது இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறோம். ஆனால் தி.மு.க. ஆட்சி குடும்ப ஆட்சியாகத்தான் நடந்தது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்ல பாக்கம் ராஜேந்திரன், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் லியோ என்.சுந்தரம், ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி.ஜெய வர்தன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் டி.சி.கோவிந்தசாமி, அவைத்தலைவர் தனபால், தன்சிங் வி.என்.பி.வெங்கட் ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் டி.சி.கருணா நன்றிகூறினார்.
Tags:    

Similar News