ஆன்மிகம்
கோவில் திருக்குளம், இளங்கோவை அம்மன்

ஆற்றில் மிதந்துவந்த இளங்கோவை அம்மன் கோவில்

Published On 2019-07-10 01:32 GMT   |   Update On 2019-07-10 01:32 GMT
தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் என்ற இடத்தில் இளங்கோவை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் என்ற இடத்தில் இளங்கோவை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் இங்கு வந்ததற்கு தல வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.

கேரளாவில் உள்ளது ஒரு மலைக் கிராமத்தில் ஒரு சிறிய ஆலயம். அந்த ஆலயத்தில் அருள்புரிந்து கொண்டிருந்தாள், அன்னை இளங்காளி அம்மன். சரியான பராமரிப்பு இல்லாத ஆலயம். மக்களும் ஆலயத்திற்கு வருவதில்லை. முறையான வழிபாடுகள் கிடையாது. இதனைக் கண்ட அன்னையின் மனதில் வெறுமை சூழ்ந்தது. ‘நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்’ என தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். வேறு இடம் சென்றாள் என்ன? அன்னையின் மனதில் தோன்றியது. இந்த எண்ணம்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே இருக்க முடியும். அன்னை முடிவெடுத்தாள். மூலவர் அன்னை காற்று வடிவமாக அரூபமாக வெளியே வந்தாள். தெற்கு நோக்கி காற்று வடிவில் பயணத்தைத் தொடங்கினாள். காட்டின் வழியே காற்று வடிவில் பயணம் செய்த அன்னை, பல காத தூரத்தைக் கடந்தாள்.

‘எங்கே கோவில் கொள்வது?’ அன்னைக்குப் புரியவில்லை. மனதிற்கும் பிடித்த இடம் எதுவும் அமையவில்லை. காட்டில் ஓரிடத்தில் சிறுவன் ஒருவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். இடுப்பில் ஒரு துண்டு. தோளில் ஒரு துண்டு. கையில் நீண்ட ஒரு மூங்கில் கழி. அன்னை அவன் எதிரே போய் நின்றாள்.

“தம்பி” அழைத்தாள் அன்னை.

குரல் கேட்டு சுற்றிலும் பார்த்தான் சிறுவன். யாரையும் காணவில்லை.

கல் மீது அமர்ந்த அந்த சிறுவன், கையில் இருந்த கொய்யாப் பழத்தை சுவாரசியமாக கடித்து உண்ணத் தொடங்கினான்.

“தம்பி” மறுபடியும் அழைத்தாள் அன்னை.

குரல் கேட்டு திடுக்கிட்டான் சிறுவன். சுற்றிலும் பார்த்தான். இப்போதும் யாரையும் காணவில்லை.

திகிலுடன் “யாரது?” என்று கூவினான்.

காற்று வடிவில் இருந்த அன்னை “நான்தான்” என்றாள்.

குரல் மட்டும் கேட்கிறது. யாரையும் காணவில்லையே என்று எண்ணிய சிறுவன் பயம் கலந்த துணிவுடன் “நான்தான் என்றால் யார்? பேயா?” என்று கேட்டான் சற்றே நடுங்கிய குரலில்.

“இல்லை. என் பெயர் இளங்காளி அம்மன்” என்றாள் அன்னை.

“இல்லை. நான் நம்ப மாட்டேன். நீ காளி என்றால் என் முன்னே வரலாமே. உன் தலையையும் பார்க்க முடியவில்லை, காலையும் பார்க்க முடியவில்லை. கால் இல்லை என்றால் அவர்கள் பேய் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நீ உன்னுடைய கால்களை மட்டுமாவது எனக்கு காட்டு. அப்போதுதான் நான் நம்புவேன்” என்றான்.

“இதோப் பார் குனிந்து எதிரே பார்”

சிறுவன் குனிந்து எதிரேப் பார்த்தான்.

எதிரே இரண்டு பாதங்கள் தெரிந்தன. அந்தப் பாதத்தின் கணுக்காலில் ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சிறுவனின் உடம்பு வியர்க்கத் தொடங்கியது. கரம் குவித்து அன்னையின் பாதத்தையும், சீறும் நாகங்களையும் வணங்கினான்.

“தாயே! நான் என்ன செய்ய வேண்டும்?”

“எனக்கு ஒரு உதவி வேண்டும்”

“சொல்லுங்கள் தாயே” என்றான் சிறுவன்.

“எனது இரண்டு பாதங்களையும் ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆற்றில் விட வேண்டும்”

“ஏன் தாயே?”

“கேள்வி வேண்டாமே! சொன்னதை செய்”

“ஆகட்டும் தாயே” என்ற சிறுவன் அருகே இருந்த காவிரி நதிக்கரை வந்தான்.

காவிரியில் தண்ணீர் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றவன், அங்கு இருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து கொண்டு திரும்ப அன்னை இருந்த இடத்திற்கு வந்தான்.

பெட்டியைத் திறந்தான். இரண்டு பாதங்களும் நாகங்களுடன் பெட்டியில் அமர்ந்து கொண்டன.

“பெட்டியை மூடு. இறுக கட்டு. பிறகு ஆற்றில் விட்டு விடு” என்று குரல் ஒலிக்க, சிறுவன் பெட்டியை மூடினான். அருகே படர்ந்து இருந்த கோவை கொடிகளை பறித்து பெட்டியை இறுகக் கட்டினான்.

காவிரியில் திடீரென நுங்கும் நுரையுமாக வெள்ளம் வரத்தொடங்கியது. அந்தப் பெட்டியை சிறுவன் அந்த வெள்ளத்தில் மிதக்க விட்டான். பெட்டி தன் பயணத்தைத் தொடங்கியது. காவிரி வெள்ளத்தில் பயணம் செய்த அந்தப் பெட்டி ஓரிடத்தில் கரை ஒதுங்கியது.

அந்த நேரம் காவிரியில் நீராட வந்தார், ஒரு முதியவர். அந்த ஊரின் பெரிய மனிதர் அவர். தன் கண்ணில் பட்ட பெட்டியை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு வந்தார்.

ஆனால் பெட்டியை திறந்து பார்க்காமல், பரண் மேல் வைத்து விட்டார். பின்னர் அந்தப் பெட்டியைப் பற்றி மறந்து விட்டார்.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் அவர் பண்ணையில் இருந்த ஒரு பசு திடீரென இறந்தது. பெரியவருக்கு காரணம் புரியவில்லை. மறுநாள், அதற்கு அடுத்த நாளும் மற்றொரு பசு இறந்து போனது. பதறிப்போனார் பெரியவர். அன்று இரவு, அவரது கனவில் தோன்றிய இளங்காளி அம்மன், “நீ ஆற்றில் இருந்து எடுத்து வந்த பொட்டியில் நான்தான் இருக்கிறேன். என்னை நீ மறந்துவிட்டாய். எனக்கு ஒரு கோவில் கட்டு. இந்த ஊரின் காவல் தெய்வமாக இருந்து மக்களை காப்பேன்” என்றாள்.

திடுக்கிட்டு விழித்த பெரியர், பரண் மேல் இருந்த பெட்டியை எடுத்துப் பார்த்தார். பெட்டிக்குள் ஒன்றுமே இல்லை. அன்னையின் திருவிளையாடல் என்று எண்ணிய பெரியவர், ஊர் மக்கள் உதவியோடு ஆலயம் கட்டினார். மூலவராக தான் கனவில் கண்ட அன்னையின் உருவத்தை சிலையாக வடித்தார். நான்கடி உயரம், நின்ற கோலம். நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சூலம், உடுக்கை, கீழ் இரு கரங்களில் பாசம், கபாலம், அன்னையின் கழுத்து மாலை, கால் சிலம்பு, கை வளையல்கள், இடுப்பு ஒட்டியானம் என்று அனைத்தும் பாம்பின் வடிவங்கள்.

கோவை கொடிகளால் சுற்றப்பட்ட பெட்டியில் வந்ததால், அன்னைக்கு ‘இளங்கோவை அம்மன்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இந்த ஆலயமே தில்லைஸ்தானத்தில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வடதிசை நோக்கி அருள் பாலிக்கிறாள். ஆலயத்தின் மேல் திசையில் திருக்குளம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தலத்திற்கு அருகே உள்ளது, தில்லைஸ்தானம். கல்லணை - சுவாமிமலை சாலையில் கல்லணையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், திருவையாறில் இருந்து 1½ கி.மீ தொலைவிலும் ஆலயம் இருக்கிறது. தில்லைஸ்தானம் பேருந்து நிறுத்தம் அருகேயே ஆலயம் உள்ளது.

ஜெயவண்ணன்
Tags:    

Similar News