ஆன்மிகம்
நாகராஜா கோவில்

சுயம்புவாக உருவான மூலவர் நாகராஜா

Published On 2021-02-04 01:27 GMT   |   Update On 2021-02-04 01:27 GMT
நாகர்கோவில் பெயர் வர காரணமான நாகராஜா கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம்.
நாகர்கோவில் பெயர் வர காரணமான நாகராஜா கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிரு‌‌ஷ்ணனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டு இருக்கும்.

தலப்புராணம்

நாகராஜா கோவிலுக்கு என்று தனியாக தலப்புராணம் கிடையாது. இது சமண கோவிலாக இருந்துள்ளது. கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை சமண பள்ளியாக இருந்த இந்த கோவிலின் வழிபாடு பற்றிய சான்றுகள் இல்லை. ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக இருந்துள்ளார்.

தர்ணேந்திரன் பற்றி சமண கதைகள் உண்டு. அதாவது, சமணத்தின் 23-ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர். இவருக்கு பிறவிகள்தோறும் துன்பம் அளித்தவன் சமடன். இவன் கடைசி பிறவியில் மகிபாலன் என்ற பெயரில் பிறக்கிறான். மகிபாலனுக்கு பேரனாக பார்சுவநாதர் உள்ளார். ஒரு நாள் மகிபாலன் ஒரு மரக்கட்டையை தீயில் போட முயன்றான். அப்போது சிறுவனாக இருந்த பார்சுவநாதர் அந்த மரக்கட்டையில் 2 பாம்புகள் இருப்பதாகவும், எனவே அதை தீயில் போடாதே என்றும் கூறி தடுக்க முயன்றார்.

ஆனால் மகிபாலன் கேட்கவில்லை. கட்டையை தீயில் போட்டுவிட்டான். இதனால் 2 பாம்புகளும் தீயில் எரிந்து இறந்தன. அதன் பிறகு பார்சுவநாதர் மந்திரம் ஓதி இறந்த பாம்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். அதில் ஒன்றுதான் நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) மற்றொரு பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறந்தன. இதன்படி கோவிலில் தெற்கு கருவறையில் இருக்கும் நாகராஜர்தான் தர்ணேந்திரன் ஆவார்.

கட்டுமானம்

இதுதவிர இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் உள்ளன. அதாவது இந்த கோவிலை முதலில் வை‌‌ஷ்ணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர், 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுலவல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தார். இந்த அரசனுக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோ‌‌ஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடம்பில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். தான் கோவிலில் தங்கி இருந்த காலகட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது.

பரிவார தெய்வங்கள்

இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் இருக்கிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு சிறு சன்னதிகள் உண்டு.

இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவில் 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே பாலமுருகன் சன்னதி உள்ளது. இது 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிரு‌‌ஷ்ணர் சிலை உள்ளது.

12 கல்வெட்டுகள்

நாகராஜா கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. இங்கு தெப்பக்குளம் உண்டு. ஆனால் தெப்ப விழாக்கள் நடைபெறுவது இல்லை. கோவிலில் உள்ள 12 கல்வெட்டுகளிலும் அரசர் பூதலவீர உதய மார்த்தாண்டவர்மாவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தேரேகால்புதூர், தேரூர், சுசீந்திரம், புரவசேரி ஆகிய இடங்களில் கோவிலுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலம் இன்னமும் உள்ளன. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News