வழிபாடு
ஹம்சம், கிளி வாகன சேவை நடந்தபோது எடுத்தபடம்.

பிரம்மோற்சவ விழா: ஹம்ச, கிளி, சேஷ, யாழி வாகனங்களில் சிவன், அம்பாள் வீதிஉலா

Published On 2022-03-01 02:57 GMT   |   Update On 2022-03-01 02:57 GMT
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஹம்ச, கிளி, சேஷ, யாழி வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்ன (ஹம்ச) வாகனத்தில் எழுந்தருளினார். பறவைகளில் ெமன்மையானது. வெண்மையானது அன்னப்பறவை என்னும் ஹம்சம். அன்னப்பறவை வாகனத்தில் பவனி வரும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் அறிவில் தெளிவும், புத்தி கூர்மையும் மனதில் மகிழ்ச்சியும் உண்டாகும், மக்களின் தீய எண்ணங்கள், செயல்களை ஒழித்து நல்வழிபடுத்தவே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள் பாலித்தார்.

ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார். கிளி சுகத்தின் அடையாளம். பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். மனிதர்களோடு பழகி தோழமை கொள்ளும். நாம் வணங்கும் தெய்வங்களை நமக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் அடையாளமாக கிளி வாகனத்தில் அம்பாளை அமர்த்தி உலா வரச் செய்கிறார்கள். கிளியின் மீது அமர்ந்து பவனி வரும் தாயாரை வணங்குவதால் மனதில் இன்பம் பொங்கும். இல்லற வாழ்வில் சுகம் கூடும். எனவே மக்களுக்கும், பக்தர்களுக்கும் சுகமான வாழ்வு அமைய ஞானப்பிரசுனாம்பிைக தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளினார். சிவன் கோவில்களில் லிங்க திருமேனியை வால், உடல் பகுதியால் சுற்றியவாறும், படமெடுத்து குடை பிடித்தவாறும் அலங்கரித்து ஆராதனை செய்பவன் சேஷன். சிவனின் கழுத்தில் சுற்றியபடி படமெடுத்து ஆடும் சேஷனை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

யாழி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளினார். யாளி கொடிய விலங்கு. உடல் சிங்கத்தைப்போன்றது. யாளி முன்காலை தூக்கி தாவி பாயும் நிலையிலேயே காணப்படும். கால்களில் கூரிய நகங்கள் உண்டு. சிங்கத்தின் முகமும், யானை முகமும் சேர்ந்த ஒரு கலவையாக இருக்கும். துதிக்கை நீண்டு காணப்படும்.

யாழி அடர்ந்த காட்டில் வாழ்பவை. எனவே அசுரர்களை அடக்கி அரசனைபோல் நாடாளும் வல்லமையை மக்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கவே ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News