செய்திகள்
மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சென்னைக்கு அடுத்து மதுரையில் தான் அதிக வசதிகள்- மருத்துவ கல்வி இயக்குனர்

Published On 2020-09-19 02:46 GMT   |   Update On 2020-09-19 02:46 GMT
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்தான் அதிக அளவில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
மதுரை:

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆய்வு நடத்தினார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும். அவர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார்.

முன்னதாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் மருத்துவ கல்வி இயக்குனர், டாக்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். டீன் சங்குமணி தலைமை தாங்கினார். அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரைக்கு தான் அதிக அளவிலான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மதுரையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ரெமிடெசிவிர் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளும், 750 பல்ஸ் ஆக்சி மீட்டரும், 97 உயர் அழுத்த ஆக்சிஜன் கருவிகளும், 155 வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து செல்லும் நபர்களிடம் ஒரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதன்படி அவர்களது விருப்பத்தின் பேரில் அவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். மதுரையில் இதுவரை 22 பேர் பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார்கள். இதில் யாரையும் வற்புறுத்த முடியாது. விருப்பம் இருப்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரலாம். பிளாஸ்மா தானம் அளிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா அதிகம் பரவி விடாமல் இருக்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News