உலகம்
ஜி7 கூட்டம்

ரஷியாவிற்கு உதவ வேண்டாம்- சீனாவுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

Published On 2022-05-14 11:46 GMT   |   Update On 2022-05-14 11:46 GMT
ரஷியாவின் ஆக்கிரமிப்பு போர் மிகக் கடுமையான உணவு மற்றும் ஆற்றல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக ஜி7 நாடுகள் கூறி உள்ளன.
வெய்செனாஸ் (ஜெர்மனி):

உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுவதாக ஜி7 கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என்று சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன. 

‘ரஷியாவின் ஆக்கிரமிப்பு போர் மிகக் கடுமையான உணவு மற்றும் ஆற்றல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது இப்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கூட்டணி நாடுகளுக்கு ஆதரவாக நிற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை சீனா ஆதரிக்க வேண்டும். ரஷியாவின் ஆக்கிரமிப்பு போரில் உதவ வேண்டாம்’ என ஜி7 நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட 2.5 கோடி டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் முடங்கியிருப்பதாகவும், இதனால் உலக அளவில் உணவு பற்றாக்குறை நிலவி வருவதாகவும்  ஐ.நா உணவு பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை வெளியே எடுத்து செல்ல முடியாதபடி ரஷியா கடல்வழியை தடுத்துள்ளது. உலக நாடுகள் தலையிட்டு ரஷிய தடுப்புகளை நீக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News