செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

வேலை வாங்கி தருவதாக மோசடி: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-06-24 02:16 GMT   |   Update On 2021-06-24 02:16 GMT
வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 4 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை:

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 4 பேர் மீது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில், மோசடி தொடர்பாக மேலும் 2 வழக்குகள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை வழங்குவது தொடர்பாக நேரில் ஆஜராகும்படி செந்தில்பாலாஜிக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டசபை கூட்டம் நடந்து வருவதால் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில்பாலாஜி ஜூலை 15-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News