உள்ளூர் செய்திகள்
தேரோட்டத்திற்கான தேர் பராமரிப்பு பணிக்கு திருக்கால் நடப்பட்டபோது எடுத்த படம்.

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெறுமா?

Published On 2022-01-12 09:06 GMT   |   Update On 2022-01-12 09:06 GMT
செங்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மஸம் வர்த்தினி அம்பாள் ஸமேத ஸ்ரீ குலசேகரநாத ஸ்வாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடத்தவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை:

செங்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மஸம் வர்த்தினி அம்பாள் ஸமேத ஸ்ரீ குலசேகரநாத ஸ்வாமி கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

மிக முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.  செங்கோட்டை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் நடப்பாண்டிற்கான தேரோட்ட நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் 31-ந்தேதி திருக்கால் நடப்பட்டு தூய்மைபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் 3-வது அலை கொரோனா தொற்று, ஒமைக்ரான் போன்ற வைரஸ் பாதிப்பு கடந்த இரு வாரங்களாக நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. 

மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கை கடைபிடித்துள்ளது. பொது ஊரடங்கு காரணமாக அனுமதி மறுக்கபட்டுள்ளதால் அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி மிகவும் எளிய முறையில் தைப்பூசத்திற்கான கொடியேற்றமானது 9-ந்தேதி நடந்து முடிந்த நிலையில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

விழாவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேமும், அலங்காரமும், இரவில் சுவாமி அம்பாள் உள்பிரகாரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 17-ந்தேதி 9-ம் நாள் அன்று விநாயகர் முருகன் கோலத்திலும்,  சுவாமி அம்பாள் தனி தேரிலும் எழுந்தருளி திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் அரசு அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே தேரோட்டம் நடைபெறும் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 தேரோட்டம் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Tags:    

Similar News