தமிழ்நாடு
கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் தலைமை பணிக்குழு- கமல்ஹாசன்

Published On 2021-12-07 09:34 GMT   |   Update On 2021-12-07 09:34 GMT
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள் http://www.maiam.com/application-form.php என்ற இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சிகளை வலுவாக்கும் முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது, மக்கள் நீதி மய்யத்தின் பிரதான லட்சியங்களில் ஒன்று. இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக மய்யமானது தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறது.

மய்யத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, தங்களது ஜனநாயகக் கடமையினை செவ்வனே தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனர். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த ‘ஏரியா சபை, வார்டு கமிட்டி’ போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்தச் சமயத் தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, துணைத் தலைவர் மவுரியா, தலைமையில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக் குழுவை அறிவிக்கிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள், கீழ்க்காணும் இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இணைய முகவரி: http://www.maiam.com/application-form.php

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல் அறிவித்துள்ள மாநில தேர்தல் தலைமை பணிக்குழுவில் மவுரியா தவிர துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு, நிர்வாக உறுப்பினர் ஸ்ரீபிரியா, மாநில செயலாளர்கள் இளங்கோ, செந்தில் ஆறுமுகம், சரத்பாபு, ஏழுமலை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 6 பேர் குழு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை தேர்தல் பணிக்குழுவாக செயல்படும்.

இது தவிர ஒவ்வொரு பாராளுமன்றத்திற்குட்பட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்துக்கு சென்னை மண்டல அமைப்பாளர் வக்கீல் அணி கே.சேகர் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வடசென்னை தொகுதிக்கு மாநில செயலாளர்கள் டி.எஸ்.சஜீஷ், பிரகாஷினி சிவநேசன், தென் சென்னைக்கு கிருபாகரன், சினேகா மோகன்தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னைக்கு மாநில செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் சண்முகராஜன், ஸ்ரீபெரும்புதூருக்கு வக்கீல் அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீதர், காஞ்சிபுரத்துக்கு மண்டல செயலாளர் கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News