செய்திகள்
டேவிட் பெர்ரி, பொம்மை மான்

மானை வேட்டையாடியவருக்கு கிடைத்த வினோத தண்டனை

Published On 2019-11-14 07:22 GMT   |   Update On 2019-11-14 07:22 GMT
அமெரிக்காவில் மானை வேட்டையாடியவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையுடன் மற்றொரு வினோத தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தைச் சேர்ந்தவர் டேவிட் பெர்ரி. இவர் அப்பகுதியில் உள்ள மான்களை இரவு நேரங்களில் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வேட்டையாடி அவற்றின் தலைகளை எடுத்துக்கொண்டு உடலை விட்டுச்சென்றார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தையும் சகோதரரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான மான்களை கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையில் வனவிலங்குகளை கொன்று சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாக குற்றத்தை டேவிட் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மிசோரியில் உள்ள 39வது நீதித்துறை நீதிமன்றத்தின் இணை நீதிபதி ராபர்ட் ஜார்ஜ் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.

அத்துடன் சிறையில் ஒவ்வொரு மாதமும் வால்ட் டிஸ்னியின் பாம்பி படத்தை பார்க்க வேண்டும் எனவும் தண்டனை விதித்தார். பாம்பி மான்களை பற்றிய படமாகும். காட்டில் வளர்ந்து வரும் ஒரு இளம் மானின் கதையை மையமாக கொண்டது. இந்த படம் 1942 ம் ஆண்டு வெளி வந்தது.

மேலும், ஆயுத விதிமுறைகளை மீறி வேட்டையாடிய குற்றத்திற்காக டேவிட்டை 3 மாதம் பார்டன் கவுண்டி சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதுதவிர டேவிட் மற்றும் அவரது தந்தையின் வேட்டையாடும் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்து மிசோரி பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

மிசோரி மாநில வரலாற்றில் வனவிலங்குகள் மிகப்பெரிய அளவில் வேட்டையாடப்பட்ட வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News