செய்திகள்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் தினமும் 66 ஆயிரம் பெண்கள் இலவச பயணம்

Published On 2021-10-11 11:19 GMT   |   Update On 2021-10-11 11:19 GMT
டவுன் பஸ்களில் கடந்த 4 மாதங்களாக பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்:

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ந் தேதி முதல்-அமைச்சராக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டார்.

அதில் டவுன் பஸ்களில் பெண்கள் பயணிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது முக்கியமான திட்டமாகும். இந்த திட்டம் மே 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடி மண்டலத்தின் கீழ் ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய இடங்களில் டெப்போக்கள் உள்ளன. இதில் 118 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

மே 10-ந் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஜூன் 28-ந்தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

டவுன் பஸ்களில் கடந்த 4 மாதங்களாக பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 66 ஆயிரம் பெண்கள் கட்டணமின்றி பயணம் டவுன் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இதுவரை 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அலுவலர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பை விட தற்போது பெண்கள் அதிகமாக டவுன் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

ஒவ்வொரு பஸ்சிலும் சராசரியாக 70 முதல் 80 சதவீதம் பெண்களே பயணம் செய்கின்றனர். கிராமங்களுக்கு சென்று வரும் டவுன் பஸ்களில் தான் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகும்.

பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணமில்லை என அறிவித்திருப்பதால் கிராம பெண்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்து வருகின்றனர் என்றார்.

Tags:    

Similar News