செய்திகள்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

திமுக ஊழலில் ஊறிப்போன கட்சி- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

Published On 2021-03-20 06:13 GMT   |   Update On 2021-03-20 06:17 GMT
ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது என தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி:

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அவர் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அதன்பின்னர் மாலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு அரியலூர், பெரம்பலூர் பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை அரியலூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி திறமையான கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நமது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும், என்னை பற்றியும் பொதுமக்களிடம் அவதூறு பரப்பி வருகிறார். அ.தி.மு.க. கட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பார்த்து நான் விவசாயி இல்லை, போலி விவசாயி என்று பிரசாரம் செய்கிறார். எனது தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நானும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளில் எப்படி போலி விவசாயி இருக்கமுடியும்.

அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது செயல்பட்டு வரும் உள்ளாட்சிதுறை மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சரை பற்றி ஸ்டாலின் குறைகூறி வருகிறார். நாங்கள் உள்ளாட்சிதுறையின் மூலம் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். உள்ளாட்சிதுறை அமைச்சர் 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்றது தமிழக உள்ளாட்சிதுறைதான்.

மாணவர்கள் தேர்வு சிறப்பாக எழுதினால்தான் அவர்களது தேர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அவர்கள் உயர்கல்வி படிக்க முடியும். நாங்கள் உள்ளாட்சிதுறையில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே எங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

தி.மு.க. ஆட்சியின்போது உள்ளாட்சிதுறையில் எந்த விருதாவது பெற்றுள்ளீர்களா? தி.மு.க.வினருக்கு கொள்ளையடிப்பதுதான் குறிக்கோளாக உள்ளது. கருணாநிதி முதல்-அமைச்சரான பிறகுதான் தமிழகத்தில் ஊழல் பெருத்துவிட்டது. அதற்கு முன்பு தமிழகத்தில் ஊழல் கிடையாது. ஊழல் பெருத்த கட்சி தி.மு.க.தான்.

ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. என பொதுமக்களிடம் பொய் பிரசாரம் செய்து மக்களை குழப்பி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் நாங்கள் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தற்போது தனி மாவட்டமாக அறிவித்துள்ளோம். கள்ளக்குறிச்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைபூங்கா அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளேன்.

தி.மு.க. கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. தற்போது அவர்கள் கோர பசியில் உள்ளனர். ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்வார்களா? என்று நீங்கள் எண்ணிபார்க்க வேண்டும்.

தி.மு.க.வினர் காவல்துறையை மிரட்டுகின்றனர். ஸ்டாலினின் மகனான உயதநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். வந்தால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியுமா? என காவல்துறையை எச்சரிக்கிறார்.

காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் நிலை என்னவாகும். தி.மு.க. அராஜக கட்சி. அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது. தி.மு.க.வில் உள்ளவர்கள் குண்டர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஓட்டல்களில் சென்று பிரியாணி, பரோட்டா ஆகியவை சாப்பிட்டுவிட்டு கடைக்காரர் பணம் கேட்டால் காசு கொடுக்காமல் அவர்களை தாக்குவார்கள்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலையாக உள்ளது. இந்தியாவிலேயே சட்டஒழுங்கில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள ஏரி குளங்கள் குடிமராமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தண்ணீரை தேக்கிவைத்து பயன்படுத்த முடியும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1-ந்தேதி முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடுதொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கட்டணம் இல்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். நிலம் மற்றும் வீடு இல்லாத விவசாய தொழிலாளிகளுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகட்டி கொடுக்கும்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. எனவே வருகின்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News