செய்திகள்
கைதான விவேக்

கம்பத்தில் வங்கி பெண் மேலாளரிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு- வாலிபர் கைது

Published On 2020-11-21 07:42 GMT   |   Update On 2020-11-21 07:42 GMT
கம்பத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வங்கி பெண் மேலாளரிடம் 10 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:

உத்தமபாளையம் யாதவர் தெருவை சேர்ந்த சோலைமுருகன் மனைவி வனிதா (வயது 35). இவர் சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கம்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பஸ்நிலையம் செல்வதற்காக காலை 11 மணியளவில் காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வனிதா கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.

இதுபற்றி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தாலுகாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வயர்லெஸ் மூலம் குற்றவாளியை பிடிக்க ரோந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். 

இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கம்பம் அண்ணாபுரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மாலையம்மாள் புரத்தில் உள்ள மயானம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கம்பம் கோம்பை சாலை ஆர்.ஆர்.நகரை சேர்ந்த விவேக் (30) என்பதும், வங்கி மேலாளரிடம் தங்கச்சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர். மேலும் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான விவேக் மீது பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே குற்றவாளியை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News