செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர் மேத்யூஸ்

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை

Published On 2020-03-02 11:04 GMT   |   Update On 2020-03-02 11:04 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை, 3-0 எனத் தொடரை வென்றது.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. கருணாரத்னே (44), குசால் பெரேரா (44), குசால் மெண்டிஸ் (55), டி சில்வா (51), திசாரா பெரேரா (31 பந்தில் 38) ஆகியோரின் ஆட்டத்தால் சரியாக 50 ஓவரில் 307 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜோசப் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்களான ஷாய் ஹோப் (72), அம்ப்ரிஸ் (60), பூரண் (50), பொல்லார்டு (59) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நோக்கி சென்றது. பொல்லார்டு ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 45.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 28 பந்தில் 55 ரன்கள் தேவைப்பட்டது.

ஃபேபியன் ஆலனைத் தவிர (15 பந்தில் 37 ரன்கள்)  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் அடிக்க முடிந்தது. இதனால் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை. அத்துடன் தொடரை 3-0 எனக்கைப்பற்றியது.
Tags:    

Similar News