செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் வருகை அதிகரிப்பு

Published On 2021-06-10 04:48 GMT   |   Update On 2021-06-10 04:48 GMT
கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சென்னை:

கொரோனா 2-வது அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

மே முதல் வாரத்தில் தொடங்கிய இந்த பாதிப்பு மாத இறுதி வரை நீடித்தது. இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கூட நிறுத்தப்பட்டது.

மிகவும் அவசர அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டன. புற நோயாளிகள் மட்டுமின்றி உள் நோயாளிகளும் பெருமளவில் குறைந்தனர்.

சென்னை உள்பட அனைத்து மாநகரங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சென்னையில் மே மாதம் முதல் வாரத்தில் 37 ஆயிரம் பேர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 40 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா கவனிப்பு மையங்களில் 3,500 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மே இறுதியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பின்னர் படிப்படியாக தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகளில் தற்போது கூட்டம் குறைந்தது. கொரோனா கவனிப்பு மையங்களில் 88 சதவீதம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரமாக குறைந்துள்ளது.

சென்னையில் உள்ள 32 கொரோனா மையங்களில் 7,500 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் பிற நோய்களுக்கான சிகிச்சை அளிக்க தொடங்கி உள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலை பாதிப்பு உச்சத்தில் இருந்த கடந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் வழக்கம் போல அவசர சிகிச்சைகள், புறநோயாளிகள் பிரிவுகள் செயல்பட்டன. இந்த கால கட்டத்தில் புறநோயாளிகள் வருகை குறைந்தது. கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் புற நோயாளிகள் எண்ணிக்கை 300 முதல் 400 ஆக இருந்தது.

தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. 4 ஆயிரம் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 160- 170 வரை அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் புற நோயாளிகள் சேவை பிரிவு பாரதி பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. புற நோயாளிகள் பிரிவுக்கு தனியாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கூட அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News