செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் விசாரணை- தலைமைப்பதிவாளர் அறிவிப்பு

Published On 2021-03-07 02:03 GMT   |   Update On 2021-03-07 02:03 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி மூடப்பட்டன. கோர்ட்டு வளாகங்களில் உள்ள வக்கீல் சேம்பர்களும் அடைக்கப்பட்டன. வழக்குகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டன.

பின்னர் வைரஸ் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கோர்ட்டுகளில் நேரடி விசாரணை முறை படிப்படியாக தொடங்கப்பட்டது. தற்போது ஐகோர்ட்டுகளில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சேம்பர்கள் சுத்தம் செய்யப்பட்டு, திறக்கப்பட்டன.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு பிளீடர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை நீதிபதி எடுத்துள்ளார். அதன்படி, சென்னை ஐகோர்ட்டில், ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்றி, மத்திய, மாநில அரசு வக்கீல்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வக்கீல்கள் மட்டும், ஐகோர்ட்டில் நேரடியாக ஆஜராகி வாதிடுவார்கள். மற்ற வக்கீல்கள் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, நாளை (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆஜராகி வாதிட வேண்டும். ஐகோர்ட்டு வளாகத்துக்குள் அரசு வக்கீல்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வக்கீல் சேம்பர்கள் அனைத்தும் மூடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, ஐகோர்ட்டு மதுரை கிளையிலும், ஆன்லைன் மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று ஐகோட்டு மதுரை கிளை கூடுதல் தலைமைப் பதிவாளர் தனியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐகோர்ட்டின் இந்த அறிவிப்புக்கு வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், தமிழகத்தில் தியேட்டர்கள், அரசு அலுவலகங்கள் எல்லாம் முழுவீச்சில் செயல்படும்போது ஐகோர்ட்டின் இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே நாளை ஐகோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
Tags:    

Similar News