செய்திகள்
கொரோனா தடுப்பூசி சான்றிதழை டாஸ்மாக் மேலாளர் ராஜாவிடம் காட்டியபோது எடுத்தபடம்

தஞ்சை மாவட்டத்தில் அமலுக்கு வந்தது- கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை

Published On 2021-10-26 04:57 GMT   |   Update On 2021-10-26 04:57 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டும் வகையில் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் தான் மது வழங்கப்படும் எனவும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. நேற்று முதல் நாள் என்பதால் சான்றிதழ் இல்லாமல் வந்தவர்கள் அதை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றிதழை தங்கள் செல்போனில் பதவிறக்கம் செய்து வைத்திருந்தை காண்பித்தனர். அவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜா, உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பேனரை அவர்கள் கடைகளில் தொங்க விட்டனர்.

மேலும் மதுவாங்க வந்தவர்களிடம் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? எனவும் ஆய்வு செய்தனர். சான்றிதழ் இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர். தஞ்சை மாவட்டத்தில் 150 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News