செய்திகள்
யானை

மசினகுடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு

Published On 2020-11-06 04:26 GMT   |   Update On 2020-11-06 04:26 GMT
மசினகுடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
 கூடலூர்:

முதுமலை புலிகள் காப்பகத்தின் அருகே மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்பட சுற்றுவட்டார கிராமபுறங்களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் தனியார் தங்கும் விடுதிகளும் அதிகளவு உள்ளது. இதேபோல் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வது உண்டு. நேற்று முன்தினம் மாலை வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அப்போது அங்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் பீதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அந்த யானை தொழிலாளர்களை நோக்கி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உஷார் அடைந்ததுடன், கூச்சலிட்டபடி அந்த காட்டு யானையை துரத்தினர். பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி சுற்றி வருகிறது. இதற்கு ரிவால்டோ என பொதுமக்கள் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகும் குணம் கொண்டதாக மாறி விட்டது. இதுவரை யாரையும் விரட்டியதாக அல்லது தாக்கியதாக தகவல் இல்லை என்றனர்.
Tags:    

Similar News