ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதை படத்தில் காணலாம்.

நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

Published On 2020-09-14 09:20 GMT   |   Update On 2020-09-14 09:20 GMT
நாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக வருவது வழக்கம். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் நாகராஜரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆவணி மாதத்தில் முதல் 2 ஞாயிற்றுக்கிழமையும் கோவில்கள் திறக்கப்படாததால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் வழக்கமான பூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதிக்கு பிறகு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டம் அந்த அளவுக்கு இல்லை. குறைவான பக்தர்கள் மட்டுமே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டும் அல்லாது நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அதிலும் சிலர் காலை கோவில் நடை திறப்பதற்கு முன்னதாகவே வந்து விட்டனர்.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்து பூஜைகள் தொடங்கியதும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக கோவிலில் வட்டம் வரையப்பட்டு இருந்தது. அந்த வட்டத்தில் ஆண்களும், பெண்களும் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வரிசையானது கோவிலுக்கு வெளியேயும் நீண்டு இருந்தது. கோவிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

அதோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது.

நாகராஜா கோவிலில் முக்கிய பரிகார வழிபாடே அங்கு அரச மரத்தை சுற்றி இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்வது தான். ஆனால் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திரளான பக்தர்கள் வாங்கி வந்த மஞ்சள் மற்றும் பால் ஆகியவற்றை நாகர் சிலைகளுக்கு அருகே வைத்து விட்டு வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் கூட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நாகராஜா கோவில் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Tags:    

Similar News