செய்திகள்
கலைவாணர் அரங்கம்

கலைவாணர் அரங்கில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

Published On 2020-09-13 07:51 GMT   |   Update On 2020-09-13 08:09 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தமிழக சட்டசபை நாளை கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

வழக்கமாக சென்னை கோட்டையில்தான் சட்டசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அங்கு எம்.எல். ஏ.க்கள் இடைவெளி விட்டு அமர போதிய வசதி இல்லாத காரணத்தால் கலைவாணர் அரங்கில் 3-வது மாடியில் சட்டசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதிகளுடன் இருந்த இந்த 3-வது மாடியில் தற்போது ஏ.சி. வசதியை நீக்கி விட்டு மின்விசிறிகள் ஏராளமாக பொறுத்தப்பட்டுள்ளது. ஜன்னல் வசதிகளும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

திருமண மண்டபங்களில் நீண்ட மேஜை போடப்படுவது போல் இங்கும் அகலமான மேஜைகள் போடப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்கள் அமருவதற்கு தனித்தனி இருக்கைகளும் இடைவெளி விட்டு போடப்பட்டுள்ளன.

சட்டசபையில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் உருவப்படங்களும் புதிய சட்டசபை நடைபெறும் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. பாரம்பரியம்மிக்க சபாநாயகர் இருக்கையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கூட்ட அரங்கில் மொத்தம் 1,200 பேர் அமரக்கூடிய அளவுக்கு இடம் உள்ளது. ஆனாலும் தற்போது கொரோனா காலம் என்பதால் 400 பேர்கள் இந்த தளத்திற்கு வந்து செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

234 எம்.எல்.ஏ.க்களில் ஜெ.அன்பழகன், கே.பி.பி. சாமி, காத்தவராயன் எம்.எல்.ஏ. ஆகிய 3 பேர் இறந்த காரணத்தால் 231 எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க முடியும். ஆனால் தற்போது அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால் நாளைய கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்.

இதேபோல் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி, செய்யாறு எம்.எல்.ஏ. தூசிமோகன் ஆகிய 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் இவர்களும் நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.

எனவே, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சபாநாயகர், உள்பட 200 எம்.எல்.ஏ.க்கள் நாளைய சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இதுதவிர பத்திரிகையாளர்கள் 45 பேர், சட்டசபை ஊழியர்கள் 25 பேர், அவை காவலர்கள் 20 பேர் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெறும் 3-வது மாடியில் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கீழ் தளம் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை தொடங்கும் முதல் நாள் சட்டசபை கூட்டம் 10 நிமிட நேரத்திற்குள் முடிந்துவிடும். அப்போது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வசந்தகுமார் எம்.பி. ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும், மேலும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க் களுக்கு இரங்கல் குறிப்பும் கொண்டு வரப்படும்.

இதன் பிறகு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு நாளை மறுநாள் முதல் விவாதம் தொடங்கும். தினமும் கேள்வி நேரம் மட்டும் ஒரு மணி நேரம் நடைபெறும். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பிரச்சினைகளை சட்டசபையில் கிளப்புவார்கள்.

கொரோனா பாதிப்பு, இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு, அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவை பற்றி பரபரப்பாக விவாதிப்பார்கள். இவர்களது கேள்விகளுக்கு முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், வருவாய் பேரிடர்துறை அமைச்சர் ஆகியோர் விரிவாக பதில் அளிப்பார்கள்.

இதுதவிர நீட் தேர்வு, இந்தி திணிப்பு, விவசாயிகள் நிதி உதவி திட்ட மோசடி, அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், பள்ளி, கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சியினர் கிளப்ப உள்ளனர்.

இதனால் செவ்வாய், புதன்கிழமைகளில் சட்டசபையில் அனல் பறக்கும் விவாதங்கள் எதிர்பார்க்கலாம். சட்டசபை கூட்டம் தொடங்கியதையொட்டி கலைவாணர் அரங்கத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News