செய்திகள்
அரை சதமடித்த சிப்லி

இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் டிரா

Published On 2021-06-06 20:27 GMT   |   Update On 2021-06-06 20:27 GMT
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் சிப்லி அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லண்டன்:

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 101.1ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 42 ரன், ஒல்லி போப் 22 ரன், ஒல்லி ராபின்சன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து 132 ரன்னில் வெளியேறினார்.

நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 


இதையடுத்து, 103 ரன்கள் கூடுதல் பெற்ற நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. லாதம் 30 ரன்னுடனும், நீல் வாக்னர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதுவரை நியூசிலாந்து அணி 165 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 52.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தபோது டிக்ளேர் செய்தது. லாதம் 36 ரன்னும், ராஸ் டெய்லர் 33 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 70 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஜோ ரூட்40 ரன்னில் அவுட்டானார்.

இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகனாக அறிமுக போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய டேவன் கான்வே அறிவிக்கப்பட்டார்.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் 10ம் தேதி பெர்மிங்காமில் நடைபெறுகிறது.
Tags:    

Similar News