வழிபாடு
திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்

திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

Published On 2022-03-19 04:05 GMT   |   Update On 2022-03-19 04:05 GMT
கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.
திருமலையில் உள்ள புண்ணியத்தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தரபால்குனி நட்சத்திரத்தன்று தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நேற்று நடந்தது. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை அருகே நேற்று தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.

அதில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து காலை 4 மணி வரையிலும், நேற்று காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் பக்தர்கள் இரு தடவையாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த உற்சவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மொத்தம் 12,300 பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தும்புரு தீர்த்தத்துக்கு சென்ற பக்தர்களின் வசதிக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாபவிநாசனம் அணை பகுதியில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கினர். பாபவிநாசனம் அணை பகுதியில் மருத்துவ முதலுதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல 2 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தும்புரு தீர்த்தம் சென்ற பக்தர்களுக்கு பாபவிநாசனம் அணைப்பகுதியில் இருந்து வழி நெடுகிலும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

பாறைகளில் பக்தர்கள் சிரமமின்றி ஏறி இறங்க வழிநெடுகிலும் ஏணிகள், தடுப்புகள், இரும்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டு இருந்தன. திருமலை-திருப்பதி தேவஸ்தான சுகாதாரத்துறையின் கீழ் 80-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்து வழிகளை தூய்மையாக வைத்திருந்தனர்.

போலீஸ், வனத்துறை, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாபவிநாசனம் முதல் தும்புரு தீர்த்தம் வரை பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News