செய்திகள்
விமானப்படை விமானத்தில் ஏற்றப்படும் ஆக்சிஜன் டேங்கர்

சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்கள் விமானப்படை விமானத்தில் வருகின்றன

Published On 2021-04-24 10:38 GMT   |   Update On 2021-04-24 10:38 GMT
நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து ஆக்சிஜன் உற்பத்தி அளவை மேம்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தற்போது சுமார் 25 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் கணிசமானவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமானப்படைகள் ஒருங்கிணைந்து ஆக்சிஜன் வினியோக பணியில் ஈடுபட்டுள்ளன” என்று தெரிவித்தார்.



இதற்கிடையே நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளை ஆய்வு செய்து ஆக்சிஜன் உற்பத்தி அளவை மேம்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யவும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து நாடுமுழுவதும் ஆக்சிஜன் வினியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில்களில் ஆக்சிஜன் கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் பணி அதிகரித்து உள்ளது. காலியான ஆக்சிஜன் கண்டெய்னர்களை தொழிற் சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகளில் இந்திய விமானப்படையின் பெரிய விமானங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், எளிதில் கொண்டு செல்லக்கூடிய 23 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

இந்த எந்திரங்கள் ஒரு நிமி‌ஷத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜன் என்ற வகையில் மணிக்கு 2,400 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் கொண்டவை.

உலகப் பேரிடரான கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க முப்படைகளுக்கும் அவசர நிதி அதிகாரம் அளித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பரத் பூ‌ஷண் பாபு கூறுகையில், “ஜெர்மனியில் இருந்து புதிதாக வாங்கப்படும் 23 ஆக்சிஜன் எந்திரங்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ராணுவ மருத்துவமனைகளில் நிறுவப்படும். இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் புதிய எந்திரங்கள் ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

இந்திய விமானப்படையின் உயர் அதிகாரி கூறுகையில், “இந்த எந்திரங்களைக் கொண்டு வர ராணுவ விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த எந்திரங்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்ல இயலும். இதுபோன்ற மேலும் பல ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

இதற்கிடையே சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து மிக பிரமாண்டமான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 

அதன்படி, இன்று சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது. விரைவில் இந்தியா வந்து சேர உள்ளது. 

டெல்லியில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கைகள் கை கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிபடுத்துவதற்காக எல்லா மாநிலங்களும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தெந்த தொழிற்சாலைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது என்பதை முழுமையாக கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News