செய்திகள்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2019-10-24 03:01 GMT   |   Update On 2019-10-24 03:01 GMT
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
சென்னை:

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோல் திமுக எம்எல்ஏ  ராதாமணி காலமானதையடுத்து காலியான விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.



புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்நிலையில் நாங்குநேரி,புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்களை எடுத்து வர தாமதம் ஆனதால், வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.

பிற்பகலில் பெரும்பான்மை சுற்று முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெற்றி பெறுவது யார் என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.
Tags:    

Similar News