லைஃப்ஸ்டைல்
காசநோய்

காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்...

Published On 2020-03-24 03:03 GMT   |   Update On 2020-03-24 03:03 GMT
தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 4 சதவீதம் பேர் மரணம் அடைந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (மார்ச் 24-ந்தேதி ) உலக காசநோய் தினம்.

தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 4 சதவீதம் பேர் மரணம் அடைந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் எகிப்தில் இறந்தவர்களை உடலில் சிலவகை மூலிகைகளை பயன்படுத்தி பிரமீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தனர். இந்த உடல்களுக்கு மம்மி என்று பெயரிட்டனர். கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மம்மிகளை ஆராய்ந்த போது அதில் காசநோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. காசநோய், உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதகுலத்தில் தாண்டவம் ஆடி வருகிறது. சரியான மருந்துகள் இல்லாததால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கின்றனர். தெய்வ குற்றம், முனிவர் சாபம் போன்றவை இந்த நோய்க்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்த கருத்துகளை உடைத்தெரியும் விதமாக ராபர்ட் காக் என்ற ஜெர்மனிய மருத்துவர் 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி காசநோயை மைகோபாக்டீரியம், டிபர்குலோசிஸ் என்ற நுண் கிருமியே உருவாக்குகிறது என்று பெர்லின் நகரில் இருந்து உலகிற்கு அறிவித்தார். எனவே தான் மார்ச் 24-ந்தேதியை உலக காசநோய் தினமாக அனுசரித்து வருகிறோம். காசநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முன்பே 1859-ல் ஜெர்மானியில் முதல் காசநோயாளிகளின் சானிடோரியம் திறக்கப்பட்டது. நல்ல காற்று, சூரிய ஒளி, சத்துள்ள உணவு போன்றவை காசநோய் குணமடைய உதவும் என்று நம்பப்பட்டது. 1943-ல் காசநோய்க்கு முதன்முதலாக மருந்து (ஸ்டெப்டோமைசின்) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக வாக்ஸ்மேன் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் இதாம்புடால் பைரசினமைட் போன்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு 6 மாத காலத்தில் பலனளிக்கும் சிகிச்சை அளிக்கும் முறை வந்தது. இந்த முறை காசநோய் சிகிச்சையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. காசநோய் முக்கியமாக நுரையீரல்களை பாதிக்கும். இருமல் சளி, மாலை நேரம் காய்ச்சல், குளிர், வியர்வை, சளியில் ரத்தம், நெஞ்சுவலி, பசியின்மை, எடை குறைதல் போன்றவை நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். இரண்டு வாரங்களுக்கு மேல் இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நுரையீரல் தவிர தலைமுடி, நகங்கள் தவிர்த்து எந்த உடல் பாகத்தையும் காசநோய் தாக்கலாம். காசநோயாளிகள் இருமும் போது வெளிப்படும் கிருமிகள் நுண்நீர் துகள்களாக காற்று வெளியில் மிதந்து மற்றவர் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும். வயதானவர்கள், கட்டுப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் காசநோய் தாக்கும். நுரையீரல் காசநோயைக் கண்டுபிடிக்க முதலாவதாக எக்ஸ்ரே சளி பரிசோதனை செய்வார்கள். தற்போது தீன் எக்ஸ்பர்ட் என்ற விலை உயர்ந்த கருவி 2 மணி நேரத்தில், காசநோய் கிருமி மற்றும் அதன் வீரியத்தை கண்டுபிடிக்கிறது. சளி, நெறிக்கட்டி திசு, நுரையீரல், மூளை மற்றும் உணவுக்குழாயை சுற்றியுள்ள பைகளில் தங்கும் நீர் போன்றவற்றையும் அந்த கருவி ஆய்வு செய்கிறது. இந்த தீன் எக்ஸ்பெர்ட் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. காசநோய் உள்ளவர்கள் நான்கு விதமான முதல்கட்ட மருந்துகளை ஆறு முதல் ஒன்பது மாதம் உட்கொண்டால் முற்றிலும் குணமடைவர்.

இடையிலேயே குணம் அடைந்தவுடன் மருந்துகளை நிறுத்தக் கூடாது. மருத்துவர் ஆலோசனைப்படியே நிறுத்த வேண்டும். இல்லையேல் எஞ்சியிருக்கும் சில கிருமிகளால் நோய் திரும்ப வந்துவிடும். காசநோய் மருந்துகளால் சில நேரம் பக்க விளைவுகள் வரலாம். மருத்துவரை அணுகி சிகிச்சை முறையில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம். சிகிச்சை முறையை நிறுத்தி விடுவது தீர்வாகாது.

சீரான முறையில் மருந்துகளை உட்கொள்ளாவிட்டாலும், மிகவும் அரிதாக சில நேரங்களிலும் முதல் கட்ட மருந்துகளுக்கு கட்டுப்படாத காசநோய் நம்மைத் தாக்கலாம். அவற்றிற்கு 9 முதல் 11 மாத சிகிச்சை அல்லது 18முதல் 20 மாத சிகிச்சை என சிகிச்சை முறைகள் உள்ளன. பிடாக்குலின், டிலமானிட் என்ற உலகத்தரம் வாய்ந்த இரண்டாம் கட்ட மருந்துகள் இலவசமாக கிடைக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம், 2035-ல் காசநோயை ஒழிப்போம் என அறிவித்தது. மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு முன்பாக 2025-ல் காசநோயை ஒழிப்போம் என சூளுரைத்துள்ளது. காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் இப்போது காசநோய் ஒழிப்பு திட்டம் என விசுவரூபம் எடுத்துள்ளது. காசநோய் பற்றிய பயம் தேவையற்றது. மக்கள் அனைவரும் பி.சி.ஜி. தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு போடுதல், காசநோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுதல், முறையாக மருந்துகள் உட்கொள்ளுதல், இருமும்போது வாய், மூக்கில் துணி கொண்டு மூடி கவனமுடன் செயல்படுதல் போன்றவற்றை கடைபிடித்தால் காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். நாம் அனைவரும் குடும்ப பொறுப்பு, சமூக பொறுப்புடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

டாக்டர் எஸ்.குமார், நிலைய மருத்துவர், அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை, தாம்பரம்.
Tags:    

Similar News