செய்திகள்
கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையாளர் பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Published On 2019-11-14 14:22 GMT   |   Update On 2019-11-14 14:22 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் பழனிச்சாமி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் முதன் முறையாக தூத்துக்குடியில் நடத்தப் படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளில் நடத்தப் படும். இதன் நோக்கம் உள் ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக நடத்தப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான கையேடுகளை படித்திருக்க வேண்டும். இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சந்தேகங்களை எளிதில் தீர்க்கலாம். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலை போல் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் லட்சக் கணக்கானோர் போட்டியிடுவார்கள்.

ஊரக பகுதியில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 450 பேரையும், பஞ்சாயத்துகளில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக சுமார் 7 லட்சம் பேர் வரை போட்டியிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News