வழிபாடு
கல்யாணசுந்தரர், கோகிலாம்பாளுடன் எழுந்தருளியதையும், அஸ்திரதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததையும் காணலாம்.

நாகை புதிய கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2022-02-17 03:11 GMT   |   Update On 2022-02-17 03:11 GMT
கடற்கரையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகை புதிய கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்-பெருமாள் கோவில்களில் இருந்து சாமி வாகனங்கள் புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 ஆண்டுகளாக சாமி புறப்பாடாகி கடற்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நேற்று நாகை புதிய கடற்கரையில் நடைபெற்றது.

இதில் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து கல்யாணசுந்தரர், கோகிலாம்பாள், அஸ்திரதேவருடன் புறப்பாடாகி புதிய கடற்கரையில் எழுந்தருளினார். அதேபோல் நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், நாகை சட்டையப்பர் கோவில், மெய்க்கண்ட மூர்த்தி கோவில், நடுவதீஸ்வரர் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீதாய் மூகாம்பிகை கோவில், அந்தணப்பேட்டை நித்தியகல்யாண பெருமாள் கோவில், அண்ணாமலை நாதசுவாமி கோவில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சாமி புறப்பாடாகி நாகை புதிய கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடற்கரையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகை நம்பியார்நகர், ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். அதேபோல் வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடாகி கல்லாறு கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.

வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று பந்தற்காட்சி உற்சவம் நடந்தது. இதில் தியாகராஜ சாமியும், நடராஜ சாமியும் 16 கால் மண்டபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதி உலா வந்தார்.
Tags:    

Similar News