செய்திகள்
ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே குடிநீர் வசதி கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-26 10:13 GMT   |   Update On 2019-09-26 10:13 GMT
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் ஆர்ப்பாட்டத்திலும், காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன் பட்டியை அடுத்துள்ள அருந்ததியர் காலனியில் ஆழ்துளை கிணறு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக வறண்டது.

இதனால் தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என அங்கு வசிப்பவர்கள் கடந்த 4 மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஒன்றிய அலுவலக பகுதியில் 40க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரும் வரை அதே பகுதியில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தண்ணீர் இல்லாத ஊருக்கு செல்வதை விட போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல தயாராக உள்ளதாக கூறிய பொதுமக்கள் போராட்டத்தை கை விட மறுத்து காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவல் துறையினர் உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News