செய்திகள்
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் திடீர் கனமழை- 800 ஏக்கர் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம்

Published On 2021-02-22 09:18 GMT   |   Update On 2021-02-22 09:18 GMT
கடலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக 800 ஏக்கர் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை விடிய விடிய தொடர்ந்து காலை வரை நீடித்தது.

கடலூர் தாழங்குடா, நாணமேடு, சுப உப்பலவாடி, உச்சிமேடு, நெல்லிக்குப்பம் அடுத்த வானமாதேவி, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம், திருமாணிக்குழி, கட்டார சாவடி, புதுப்பாளையம், குமளங்குளம் நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள், காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு இருந்தது .

சுமார் 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் மணிலா, கத்திரிக்காய், மிளகாய், வெங்காயம், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி வகைகள், உளுந்து, மரவள்ளி மற்றும் பூ வகைகள் பயிரிடப்பட்டது.

தற்போது விளைச்சல் அடைந்து வரும் நிலையில் தொடர்மழை காரணமாக நிலத்தில் தண்ணீர் தேங்கி காய்கறிகள், உளுந்து, மரவள்ளி மற்றும் பூ வகைகள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மழைநீர் முழுவதும் நிலப்பகுதியில் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்தன. இந்த நிலையில் வானமாதேவி பகுதியில் நேற்று காலை முதல் நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு வாகனங்கள் மற்றும் வேலையாட்கள் தயார் நிலையில் இருந்ததையும் காண முடிந்தது. ஆனால் இரவு தொடங்கிய மழை காலை வரை தொடர்ந்து நீடித்ததால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாதநிலை ஏற்பட்டது.

ஒருசில விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை குமளங்குளம் ஏரியின் அருகே குவித்து வைத்திருந்தனர். திடிரென நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. நெல் மூட்டைகளும் மழைநீரில் மூழ்கியது.

இந்த திடீர் கனமழை காரணமாக அனைத்து விளைபொருட்களும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News