செய்திகள்
காங்கிரஸ்

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி- பாஜகவை கண்டித்து காங்கிரஸ் நாளை ஊர்வலம்

Published On 2019-07-13 12:42 GMT   |   Update On 2019-07-13 12:42 GMT
கர்நாடகா மாநிலத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெறுகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதவி பித்து பிடித்த மதவாத பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் கேலிக்கூத்தாக்கும் பாரதீய ஜனதா கட்சியின் இச்செயலால் இந்திய நாடே வெட்கி தலைகுனிகிறது.

சர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி அதிகார பசியை தீர்த்துக்கொள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பணத்தை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க நினைக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் செயல் ஜனநாயக இந்தியாவுக்கு உகந்ததல்ல.

பதவி சுகத்துக்காக கர்நாடகா, கோவா மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலை பேசி குதிரை பேரம் நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மக்கள் விரோத பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் ஊர்வலம் நடைபெறுகிறது.

ஊர்வலத்தை அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் தொடங்கி வைக்கிறார். வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள். மெழுகுவர்த்தி ஊர்வலம் அண்ணா சாலையில் இருந்து புறப்பட்டு நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையம் வந்தடைகிறது.

அதனைத்தொடர்ந்து தலைமை தபால் தந்தி அலுவலகம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கண்டன உரையாற்றுகிறார்.

மக்களாட்சி மாண்புகளை காத்திட இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அணி தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News