உள்ளூர் செய்திகள்
மழை

நெல்லை, தென்காசி மாவட்ட அணை பகுதிகளில் சாரல் மழை

Published On 2022-04-17 06:03 GMT   |   Update On 2022-04-17 06:03 GMT
பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணையில் தற்போது 53.85 அடி நீர் இருப்பு உள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகளுக்கு வரத்து ஏற்பட்டது.

கடந்த 4 நாட்களாக மாவட்டங்களில் மழை வெகுவாக குறைந்தது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணையில் தற்போது 53.85 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 134.38 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 354.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 84.50 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 29 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.

தொடர்ந்து பெய்த கோடை மழையால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளில் நேற்று சாரல் மழை பெய்தது. கருப்பாநதியில் 2 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News