செய்திகள்
கைது

ரூ.40½ லட்சம் மோசடி வழக்கு- நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் கைது

Published On 2021-04-17 10:45 GMT   |   Update On 2021-04-17 10:45 GMT
ரூ.40½ லட்சம் மோசடி வழக்கில் நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை:

ஈரோடு மாவட்டம் கருமாண்டி செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (வயது 38), மகேஷ் (36). அண்ணன், தம்பிகளான இவர்கள் 2 பேரும் சேர்ந்து கோவையை அடுத்த அன்னூர் குன்னத்தூராம்பாளை யத்தில் ஸ்ரீ சாரு பார்ம் என்ற பெயரில் நாட்டு கோழிப்பண்ணை தொடங்கினார்கள். அவர்கள், தங்கள் பண்ணையில் பணம் முதலீடு செய்தால் அதிக ஊக்கத்தொகை அளிப்பதாக தெரிவித்தனர்.

இதை நம்பி அந்த பகுதியை சேர்ந்த 16 பேர் பணம் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி ஊக்கத் தொகை அளிக்க வில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் மொத்தம் ரூ.40 லட்சத்து 56 ஆயிரம் மோசடி நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரகாஷ், மகேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. ஆனால் வழக்கு விசாரணையின் போது மகேஷ் ஆஜராகவில்லை. பிரகாஷ் மட்டும் ஆஜராகி வந்தார். இதைத் தொடர்ந்து மகேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அவர் மீதான வழக்கை பிரித்து தனியாக நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாட்டுக்கோழி மோசடி வழக்கில் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து டான்பிட் நீதிபதி தீர்ப்புக் கூறினார். ஆனால் தீர்ப்புக் கூறிய நாளில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகேஷ், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கியிருப்பதாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மகேசை கைது செய்து டான்பிட் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ரவி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து மகேஷ் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கைதான மகேஷ் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் கூறினார்கள்.
Tags:    

Similar News