ஆன்மிகம்
ராகு கேது

நிழல் கிரகங்களான ராகு, கேது உருவானது எப்படி?

Published On 2020-09-10 09:28 GMT   |   Update On 2020-09-10 09:28 GMT
ராகு, கேது ஆகிய இந்த இருவரையும் சாயா கிரகம் என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழில் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு,கேது உருவானது எப்படி? என்று கூறும் ஐதீக தகவலை பார்க்கலாம்.
சாயா கிரகங்கள் என்று கூறப்படும் ராகு,கேது உருவானது எப்படி? என்று கூறும் ஐதீக தகவலை பார்க்கலாம்:- தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை உண்ண தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டா போட்டியை தீர்த்து வைக்க மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களைத் தன் அழகால் வசியப்படுத்தி அமுதத்தை தேவர்களுக்குப் பெரும் பகுதியை வழங்கிக்கொண்டிருந்தபோது சுவர்பானு என்கிற அசுரன்,தனக்கு அமுதம் கிடைக்காது என்று உணர்ந்து சூரிய சந்திரபகவான்களுக்குக்கிடையே தேவர் உருவம் எடுத்து அமர்ந்து அமுதத்தை வாங்கி உண்டார்.

இதனை, சூரிய, சந்திர பகவான்கள் மகாவிஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்தனர். ஸ்ரீ மகாவிஷ்ணு தன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் தலை முதல் மார்பு வரை தனியாக கழன்று தனியாக உருண்டது. உடல் தனியாக வேறு இடத்தில் விழுந்தது. அமுதம் உண்டதால் தலை பாகமும், உடல் பாகமும் உயிரோடு இருந்தன. தலை பாகத்தை மைடினஸன் என்கிற மன்னன் எடுத்து வளர்த்து ராகுபகவானாகி தன் கடும் தவத்தால் பாம்பு உடலைப் பெற்று கிரக அந்தஸ்தும் பெற்றார். தனியாக விழுந்து கிடைந்த உடல்பாகத்தை மினி என்கிற அந்தணர் வளர்த்து கேதுபகவானாகி ஞானமார்க்கங்களை அவரிடம் கற்று, விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பாம்புத் தலையை பெற்று கிரகப் பதவியை அடைந்தார்.

ராகு, கேது ஆகிய இந்த இருவரையும் சாயா கிரகம் என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழில் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உண்மைக்கோள்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இந்த ஏழினைப் பற்றி மட்டுமே ஜோதிட நூல்கள் எடுத்துரைக்கின்றன. கிரகணங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும், வேத மந்திரங்களின் அடிப்படையிலும், பின்னாளில் ராகு, கேது என்ற இரண்டு கிரகங்கள் இருப்பதாக ஜோதிட அறிஞர்கள் கூறினர்.இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைசூழ்ந்த மண்டலமாக தென்பட்டது.

இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல, புகை மண்டலமான, நிலப்பரப்பற்ற நிழற்கோள்கள் என்று அறிவித்தனர். ஒரு ஒளி மண்டலத்தில் ஒரு பொருள் குறிக்கிடுமானால் அந்தப் பகுதியில் ஒளி மறைக்கப்பட்டு அதனால் உருவாகும் கருமையான பிம்பமே நிழல். ஆனால், ராகுவும், கேதுவும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதே போன்று நிழல் என்பது, அது சார்ந்த பொருளை பின்தொடர்ந்து வருவது. ஆனால், இவை இரண்டும் யாரையும் பின்தொடர்வது இல்லை. உண்மையில் இவை இரண்டும் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டலமான பகுதிகள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
Tags:    

Similar News